விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்
இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் 08 பேர், விபத்துக்களால் (வீதி விபத்து மட்டுமல்ல) ஏற்பட்ட காயத்துக்கான சிகிச்சையினை பெறுகின்றனர் என்று, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் தேசியத் திட்ட முகாமையாளரும் (காய தடுப்பு) சமூக மருத்துவ ஆலோசகருமான டொக்டர் சமித ஸ்ரீதுங்க தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, ஒவ்வொரு மணித்தியாலமும் 450 இலங்கையர்கள் விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவ சிகிச்சையினை நாடுவதாகவும், நாளொன்றுக்கு சுமார் 11ஆயிரம் பேர், இவ்வாறு சிகிச்சையினைப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், வருடமொன்றுக்கு சுமார் 40 லட்சம் பேர், விபத்துக்களால் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக் கொள்வதாகவும் டொக்டர் சமித தெரிவித்தார்.