மஹிந்த: திரும்பவும் ஆரம்பத்திலிருந்து…

🕔 September 1, 2015

Mahinda - 053முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் – கடந்த பொதுத் தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பாக – குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை – சபாநாயகர் தெரிவையடுத்து நடைபெற்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில், மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டு, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

18 நொவம்பர் 1945 ஆம் ஆண்டு பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, 1970 ஆம் ஆண்டு – தனது 25 ஆவது வயதில் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.

பின்னர் – எதிர்கட்சித் தலைவர், அமைச்சர், பிரதம மந்திரி என்று – அரசியலில் உயர்வடைந்த மஹிந்த ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வில், 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து, பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றியீட்டும் வரையிலான 12 வருட காலப் பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாமல் இருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

இந்த வகையில், மஹிந்த ராஜபக்ஷ – தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளி நோக்கி,  பின்தள்ளப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்