மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு

🕔 June 1, 2018

மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து விட்டார் எனும் அர்த்தத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் துறை பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெணான்டோ குத்தல் தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார்.

“சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு சத்தியத்துடன் களமிறங்கவுள்ளோம்” என, அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த சத்தியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதனை வெளிப்படுத்த வேண்டும். எமது பிரசார பணிகளை சத்தியம் என்ற நாமத்தில் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளோம். அதன்பின்னர் அனைத்தையும் நாட்டுக்கு கூறுவோம். இதற்காக மத்திய ஊடக பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக பேச்சாளர் மற்றும் தொடர்பாடல் துறை பிரதானி என்ற பதவிக்கு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவை கட்சியின் செயற்குழு ஏகமனதான அங்கீகாரத்துடன் நியமித்தது.

இதன்பிரகாரம் அதற்கான நியமனத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை ஹரின் பெர்ணான்டோவுக்கு வழங்கினார். இந்நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மேலும் கூறுகையில்;

எமது பிரசார பணிக்கு சத்தியம் என்று பெயரிட்டுள்ளோம். ஏனெனில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த சத்தியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதனை வெளிப்படுத்த வேண்டும். நாம் சத்தியத்தை நாட்டுக்கு கொண்டு செல்லவுள்ளோம்.

சத்தியம் என்ற வேலைத்திட்டத்தை தாமதமாகி ஆரம்பித்தாலும் அதனை உரிய முறையில் முன்னெடுத்து செல்லவுள்ளோம். இதற்கு ஊடக நிறுவனங்களின் உதவியையும் நாடவுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது சாதாரண கட்சியல்ல. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கிய கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர்.

குடும்ப பேதமின்றி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்க கூடிய ஒரே கட்சி எமது கட்சியாகும். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு சத்தியத்துடன் களமிறங்கவுள்ளோம்.

ரணசிங்க பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கியதுடன் ராணுவ வீரர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்கினோம். அதுமாத்திரமின்றி பொலன்னறுவையை சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது தொடக்கம், சத்தியத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் களத்திற்கு வரும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்