கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள விளையாட்டு விழா, கல்முனையில் ஆரம்பம்
– எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன் –
கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் விளையாட்டு விழா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் அமைந்துள்ள கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி, இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நேற்று ஆரம்பமான இவ் விழாவினை, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம். சரத் அபேகுணவர்த்தன தொடக்கி வைத்தார். இந்த விழாவில், கிழக்குமாகாண சுகாதார பணிப்பாளர் கே. முருகானந்தம் கலந்து கொண்டு விசேட உரையாற்றினார்.
அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய சுகாதார சேவைகள் பணிமனைகளின் குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் மேற்படி விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இதன்போது,’விளையாட்டு விழா – 2015′ என்ற பெயரில், ஞாபகாரத்த கையேடொன்று, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவினால் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.