ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர்

🕔 May 11, 2018

ராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன்.

இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.

ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு, இதே பதவிக்கு முதன் முறையாகவும், இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகியுள்ளார். இவருக்கு இப்போது 32 வயதாகிறது.

தன்னை ‘குறவர்’ என அழைப்பதை ஜெகன் விரும்பவில்லை. குறவர் சமூகத்துக்குரிய எந்தவொரு அடையாளமும் தமக்குத் தேவையில்லை என்று ஜெகன் கூறுகின்றார். குறவர் என்பதற்காகவே அவரும் அவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்கொண்ட அவமானங்களும், புறக்கணிப்புகளும் அவரை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் ஆலயடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆலையடி வேம்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் அலிக்கம்பை கிராமமும் உள்ளது. இங்கு முழுதும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வாழ்கின்றனர்.

இவர்கள் தங்களுக்கிடையில் தெலுங்கு மொழியிலேயே பேசிக் கொள்கின்றார்கள். குறவர்கள் பற்றிய புராணக் கதையொன்று இலங்கையில் உள்ளது. அலிக்கம்பையில் கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இளையதம்பி குலசேகரன் எழுதிய “அலிக்கம்பை வனக்குறவர்களும் வாழ்க்கை முறையும்” எனும் நூலில் அந்தக் கதை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வேட்டையாடுதல், மந்தை வளர்ப்பு போன்ற தொழில்கள் காரணமாக குரவர்கள் இடம்பெயர்ந்து வாழத் தொடங்கினர். அனுராதபுரப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர்தான் தற்போது அலிக்கம்பைக் கிராமத்தில் உள்ளனர்” என்று, இளையதம்பி குலசேகரன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அலிக்கம்பை கிராமத்தில் தற்போது 370 குடும்பங்களைச் சேர்ந்த 1,320 பேர் வாழ்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது, அபிவிருத்தியில் அலிக்கம்பைக் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தகரம் மற்றும் ஓலைகளால் ஆன குடிசைகளில்தான் இன்னும் வாழ்கின்றனர். தண்ணீரைப் பெற்றுக் கொள்வதில் இக்கிராம மக்கள் மிக நீண்ட காலமாக கஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

வேட்டையாடுதல் மூலமும், பாம்பாட்டி மக்களை மகிழ்வித்தல் மற்றும் குறி (சாத்திரம்) சொல்லுதல் போன்றவற்றின் ஊடாகவும் இவர்கள் தமது வாழ்கைக்கான வருமானத்தினை ஒரு காலத்தில் பெற்று வந்தனர். ஆனால், இப்போது வேட்டையாடுவதற்கு அரசு தடைவிதித்து விட்டது. பாம்பாட்டுவதைப் பார்ப்பதிலும், குறிகேட்பதிலும் மக்களுக்கு ஆர்வமில்லை. அதனால் வேறு தொழிலைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு இவர்கள் தள்ளப்பட்டனர். இப்போது விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கூலித் தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், வறுமை இவர்களை விட்டு விலகவேயில்லை.

இலங்கையில் 1956ஆம் ஆண்டளவில் பணிபுரிந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை குக் என்பவர் அலிக்கம்பை மக்களின் வாழ்க்கை முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். இந்த மக்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கும், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் உணவுகளைப் பெறுவதற்கான முத்திரைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அருட்தந்தை குக் உதவியாக இருந்தார். அதற்கு முன்னர் இவர்களின் பெயர்கள் அரசு பதிவுகளில் இருக்கவில்லை. இக்காலத்தில் இவர்களை கிறிஸ்தவ மதத்துக்கு அருட்தந்தை குக் மாற்றினார்.

குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏனைய சமூகத்தவர்களிடமிருந்து இன்னும் உரிய மரியாதை கிடைக்கவில்லை. அநேகமான தருணங்களில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். தான் முதன்முதலாக பிரதித் தவிசாராய் தெரிவு செய்யப்பட்ட போது, தமது சபையிலிருந்த உறுப்பினர்களில் கணிசமானோர் அதனை விரும்பவில்லை என்கிறார் ஜெகன். குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதித் தவிசாளராக்குவதற்கு சிலர் வெளிப்படையாகவே வெறுப்பினை வெளிட்டதாகவும் ஜெகன் கூறுகின்றார்.

“நாங்கள் சாப்பிட்ட பாத்திரங்களில் சாப்பிடுவதைக் கூட, சில சமூகத்தவர்கள் தவிர்த்துக் கொள்கின்றார்கள். அதிகமானோரின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது” என்று கூறி, அலிக்கம்பை கிராமத் தலைவர் பெத்த சின்னவன் மரியதாஸ் கவலைப்பட்டார்.

இவ்வாறு, ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தம்மை ஏற்றுக் கொள்வதற்குத் தயங்குகின்றவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்துக்குரிய சபையொன்றின் பிரதித் தவிசாளராக தெரிவானமை குறித்து, பலரும் வியப்பாகவே பார்க்கின்றனர்.

“இலங்கையின் அரசியல் முறைமைதான் ஜெகனை இந்தப் பதவியில் தொடர்ந்தும் அமர்த்தி வருகிறது. இல்லாவிட்டால், அவருக்கு இந்தப் பதவி கிடைத்திருக்காது. 2006ஆம் ஆண்டு ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றமையின் காரணத்தினால்தான், ஜெகனுக்கு பிரதித்தவிசாளர் பதவியை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் இந்தத் தடவையும் அவர் பிரதித் தவிசாளராகியுள்ளார்” என்கிறார் அலிக்கம்பையில் அமைந்துள்ள புனித சேவியர் ஆலயத்தின் அருட்தந்தை சூசை நாயகம்.

2006-ம் ஆண்டு, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஜெகன், இம்முறை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். “தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்குத் தேவையான எவ்வித அபிவிருத்திகளையும் செய்யவில்லை.

அவர்கள் கொள்கைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். கொள்கைகளைப் பேசிக் கொண்டிருப்பதால் மக்களின் பசி தீர்ந்து விடப் போவதில்லை. அதனால்தான், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடத் தீர்மானித்தேன்” என்று தான் கட்சி மாறியமைக்கான காரணத்தை ஜெகன் விளக்கினார்.

அலிம்கம்பை கிராமத்தைப் பற்றி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கே சில மாதங்களுக்கு முன்னர் வரை தெரிந்திருக்கவில்லை என்கிற தகவலொன்று வியப்பாக இருந்தது. “அலிக்கம்பை கிராமத்துக்கு சில அபிவிவிருத்திகளைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் அம்பாறை மாவட்டத்துக்கான அரசாங்க அதிபரை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது, அலிக்கம்பை தொடர்பான படங்கள் மற்றும் தரவுகளை அரசாங்க அதிபரிடம் கொடுத்து, எமது கிராமத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருமாறு கேட்டோம்.

நாங்கள் கொடுத்த ஆவணங்களையெல்லாம் பார்த்த அரசாங்க அதிபர், ஓர் உத்தியோகத்தரை அழைத்து; அலிக்கம்பை என்று ஒரு ஊர் இருக்கிறதாமே உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். உத்தியோகத்தர் ஆம் என்றார். அதன் பின்னர் எங்கள் கிராமத்துக்கு, ஒரு குழுவை அனுப்பி வைப்பதாக அரசாங்க அதிபர் கூறினார். ஆனால், இதுவரை யாரும் வரவில்லை” என்று, அருட்தந்தை சூசை நாயகம் விவரித்தார்.

இவ்வாறான பின்னணியிலிருந்துதான் இந்தப் பதவிக்கு ஜெகன் வந்திருக்கின்றார். தனது சமூகத்துக்கு நிறையவே உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஜெகன் கூறுகின்றார். மற்றைய சமூகத்தவர்களுக்கு சமனாக தனது சமூகமும் எல்லாத்துறைகளிலும் முன்னேற வேண்டும் என்று அவர் ஆசைப்படுகின்றார்.

அதேவேளை, இந்தியாவிலுள்ள தெலுங்கு பேசுகின்ற மக்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தி, தங்கள் சமூகம் பற்றிய ஆரம்ப வரலாற்றினைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புகின்றார். தங்கள் சமூகத்தை குறவர்கள் என்று அழைப்பதை சிறிதும் ஜெகன் விரும்பவில்லை. இலங்கைத் தெலுங்கர்கள் என்று எங்களை அழையுங்கள் என்று அவர் வலியுறுத்துகின்றார்.

அலிக்கம்பையிலிருந்து ஜெகன் பிரதித் தவிசாளரானது போலவே, அங்கிருந்து சிலர் அரச உத்தியோகத்தர்களாக பணியாற்றத் தொடங்கியுள்ளார்கள். சட்டப் படிப்பை மேற்கொள்கொள்வதற்காக அந்தக் கிராமத்திலிருந்து ஒரு மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளான். அலிக்கம்பை பாடசாலையில் படித்த மாணவர்களில் கணிசமானோர் உயர்தரம் கற்பதற்கு இம்முறை தகுதி பெற்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் போல, தாங்களும் மாறி விடவேண்டும் என்கிற ஆர்வம் இவர்களிடம் நிறையவே தெரிகிறது.

ஆனாலும் “இவர்கள் தங்கள் அடையாளங்களை இழப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இவர்களுக்கென்று உள்ள கலாசாரங்களையும் அடையாளங்களையும் இவர்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். ஆனால், இவர்களை குறவர்கள் என்று அழைக்கக் கூடாது. தெலுங்கர்கள் என்று அழையுங்கள்” என்கிறார் அருட்தந்தை சூசைநாயகம்.

நன்றி: பிபிசி 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்