நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின

🕔 May 3, 2018

– க. கிஷாந்தன் –

டிக்கோயா நகரசபை தலைவரின் தாலிக் கொடியுடனான மாலையினை அறுத்துக்கொண்டு ஓடியவரை ஹட்டன் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்ததோடு, அறுத்துக் கொண்டிடோடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெண்டிஸ் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியவற்றினை மேற்படி நபர் அபகரித்துச் சென்றிருந்தார்.

சம்பவ தினமன்று நகரசபை தலைவரின் மனைவி கடைக்கு சென்று கொண்டிருந்த வேளையில், குறித்த சந்தேக நபர் மாலையுடன் கூடிய தாலிக் கொடியினை அறுத்துக்  கொண்டு ஓடியதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் மூலம் அவர் ஐந்து பவுன் பெறுமதியுடைய நகைகளை திருடியதாகவும், அதனை ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவுக்கு ஹட்டன் பிரதேசத்தில் உள்ள நகை கடை ஒன்றில் அடகு வைத்திருப்பதாகவும் சந்தேக நபர் கூறினார்.

மேற்படி பணத்தில் வீட்டு கூலி செலுத்தியதாகவும் ஏனைய பணத்தில் கையடக்க தொலைபேசி ஒன்றைக் கொள்வனவு செய்ததோடு, 9000 ரூபாவை  செலவழித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

களவாடப்பட்ட நகை மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட 1,16000 ரூபா பணத்தை பொலிஸார் மீட்டனர்.

சந்தேக நபரையும், மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றினை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments