முஸ்லிம் மக்கள் விவகாரம்; தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்: பூசி மொழுக தினக்குரல் முயற்சி

🕔 May 2, 2018

– முன்ஸிப் –

‘கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்’ எனும் தலைப்பில் செய்தியொன்றினை கடந்த சனிக்கிழமை வெளிட்ட தினக்குரல் பத்திரிகை, அது தொடர்பில் முஸ்லிம்கள் வெளிக்காட்டிய எதிர்ப்பினையடுத்து, இன்று வியாழக்கிழமை “தவறுக்கு வருந்துவதாக” செய்தியொன்றினை வெளியிட்டு, தனது இனவாத செயற்பாட்டினை பூசி மொழுக முயற்சித்திருக்கிறது.

முஸ்லிம் பிரதேசங்களில் தினக்குரல் பத்திரிகையை தடைசெய்யும் நடடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினை அடுத்து, தனது வியாபாரத்தினைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்த வருத்தம் தெரிவிக்கும் செய்தியினை தினக்குரல் வெளியிட்டுள்ளது.

தவறுக்கு வருந்துவதாக தினக்குரல் வெளியிட்டுள்ள குறித்த செய்தியில், எந்தவொரு இடத்திலும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘முஸ்லிம் மக்கள் விவகாரம்; தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள அந்தச் செய்தி இவ்வாறு அமைந்துள்ளது;

‘தினக்குரலில் 28.04.2018 ஆம் திகதி ‘கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்’ என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் தொடர்பில் கவலை கொள்கிறோம்.

குறிப்பிட்ட சிலரின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அந்தச் செய்தியின் தலைப்பு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிகிறது.

இதுவும் யாழ்.தினக்குரல் பத்திரிகையின் சொந்தக் கருத்தல்ல. முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட மற்றொரு தரப்பின் கருத்தாகவே இது அமைந்திருந்தது.
குறித்த செய்தியின் சாரம் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த குழு ஒன்று சமூக வலைத்தளங்களில் அநாகரிக பிரசாரம் செய்வதாகவும் இன முரண்பாடுகளை ஏற்படுத்த முனைவதாகவும் அமைந்திருந்தது.

எனினும் செய்தியின் தலைப்பு முஸ்லிம் மக்களின் மனதை வெகுவாக நோகடித்திருப்பதை உணர்கிறோம். இச்செய்தியால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக வருந்துகின்றோம்’.

தொடர்பான செய்திக்கு: தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்