முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

🕔 April 14, 2018

– அஹமட் –

சந்தம் தொலைக்காட்சியின் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து,  ஊடகவியலாளர் முஷர்ரப் இடை நிறுத்தம் செய்யப்படுவதற்கு காரணமான, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, நேற்று வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து பொத்துவில் மக்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகவியலாளர் முஷர்ரபுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவரை குறித்த நிகழ்ச்சியில் இணைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை வாசித்த ஊடகவியலாளர் முஷர்ரப், சில கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

அதனால் கோபமடைந்த மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், ஊடகவியலாளர் முஷர்ரப்புக்கு எதிராக வசந்தம் தொலைக்காட்சி நிறுவனத் தலைவரிடம் முறையிட்டு, அந்த நிகழ்ச்சியிலிருந்து முஷர்ரப்பை இடைநிறுத்துவதற்கான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தார்.

இதனையடுத்து, மேற்படி நிகழ்ச்சியிலிருந்து முஷர்ரப் இடைநிறுத்தப்பட்டார்.

தன்னை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக, இவ்வாறு பல தடவை, மு.கா. தலைவர் நடந்து கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக நேற்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

இதில் கலந்து கொண்டோர், ஹக்கீமுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட, பல்வேறு சுலோகங்களை ஏந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்