உலகிலேயே வயது கூடிய ஆண் மனிதர் யசுடரோ கொய்டி; கின்னஸ் அங்கீகாரம்
🕔 August 23, 2015


உலகிலேயே தற்போது வாழும் மிகவும் வயது கூடிய ஆண் மனிதராக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யசுடரோ கொய்டி என்பவரை கின்னஸ் அங்கீகரித்துள்ளது.
13 மார்ச் 1903 ஆம் ஆண்டு, ஜப்பானில் பிறந்த இவருக்கு, இன்றைய திகதியில் (23 ஓகஸ்ட் 2015) 112 வயதும் 164 நாட்களும் ஆகின்றன. ரைட் சகோதரர்கள் தமது விமானத்தினை வெற்றிகரமாக வடிவமைத்த காலத்தில்தான் இவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான ஆடைகளைத் தைக்கும் – தையல் தொழிலை இவர் செய்து வந்தார்.
யசுடரோ கொய்டி, 112 வயதிலும் நன்றாக தனது காரியங்களைச் செய்து வருகிறார். தனது வீட்டில் வசித்து வரும் இவர், தொடர்ச்சியாக சுகாதார நல நிலையத்துக்குச் சென்று வருகிறார். வீட்டிலிருக்கும் போது சுயமாக நடக்கிறார். வெளியில் செல்லும் வேளைகளில்தான் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகின்றார். இன்னும் சொந்தப் பற்களால்தான் சாப்பிடுகிறார். மூக்குக் கண்ணாடி இல்லாமலேயே பத்திரிகைகளை வாசிக்கின்றார்.
இதேவேளை – புகைத்தல் மற்றும் மதுப் பழக்கம் வேண்டாம் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யசுடரோவுக்கு பிடித்தமான உணவு என்ன தெரியுமா? பாண்.
கடந்த வியாழக்கிழமையன்று யசுடரோ கொய்டியின் வசிப்பிடம் சென்ற கின்னஸ் அதிகாரிகள், உலகில் தற்போது வாழும் அதி வயது கூடிய ஆண் மனிதர் அவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், கின்னஸ் சான்றிதழைக் கையளித்தனர்.

Comments

