மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல்

🕔 August 22, 2015

Jameel - 003– அஹமட் –

கி
ழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மு.காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜெமீல், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில், ஜெமீலுக்கு எதிராக – முஸ்லிம் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாரானதோடு, ஜெமீல் கட்சி மாறியமை தொடர்பில் – அவரிடம் விளக்கம் கோரி, மு.காங்கிரசின் செயலாளர் கடிதமொன்றினையும் அனுப்பி வைத்தார்.

ஆயினும்,  தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு – குறிப்பிட்ட கால வரையறைக்குள், ஜெமீல் பதில் எதனையும் அனுப்பி வைக்கவில்லை. இதனால், மு.காங்கிரஸ் சார்பாக, கிழக்கு மாகாண சபையில் ஜெமீல் வகிக்கும் உறுப்பினர் பதவியிலிருந்து, அவரை நீக்குவதென, மு.காங்கிரசின் உயர்பீடம் அண்மையில் தீர்மானமொன்றினை நிறைவேற்றியிருந்தது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் சட்டத்தின் கீழ், நபரொருவர் எந்தக் கட்சி அல்லது அணியினூடாக, குறித்த சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டாரோ, அந்தக் கட்சியை விட்டு விலகும் பட்டசத்தில், அவர் அந்தக் கட்சியினூடாக வகிக்கும் உறுப்பினர் பதவியை வறிதாக்குவதற்கு இடமுண்டு.

இதனடிப்படையில், ஜெமீல் கட்சி மாறியமையினால் – கிழக்கு மாகாணசபையில் அவர் வகிக்கும் உறுப்பினர் பதவியை வறிதாக்குமாறு, முஸ்லிம் காங்கிரஸ் – உரிய தரப்பினருக்கு அறிவிக்கவுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு முன்பாக, ஜெமீல் தனது பதவியை ராஜிநாமாச் செய்வதற்கு தீர்மானித்து, அதனை இன்று பகிரங்கமாக அறிவித்தும் விட்டார்.

இதேவேளை, தனக்கு ஏற்படவுள்ள அவமானத்திலிருந்து தப்பிப்பதற்கான, முன் கூட்டிய நடவடிக்கையாகவே, ஜெமீலுடைய மேற்படி ராஜிநாமா பற்றிய அறிவித்தலைப் பார்க்க முடிவதாக, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் புதிது செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

தான் விழப்போவதும், அதனால் – தனது மீசையில் மண்பட்டு விடும் என்பதும் நிச்சயமாகி விட்ட நிலையில், ‘மீசை இருந்தால்தானே அதில் மண்படும்’ என நினைத்து, தன்னுடைய மீசையை மழித்து விடும் முடிவை ஜெமீல் எடுத்திருக்கிறார் என்றும் மேற்படி உயர்பீட உறுப்பினர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்