அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு

🕔 March 28, 2018

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் இன்று செவ்வாய்கிழமை தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலின் முன்னிலையில் மு.காங்கிரசின் உறுப்பினர் தமீம் ஆப்தீன் சண்டித்தனம் காட்டியமையானது, சபையின் முகச் சுழிப்புக்குள்ளானது.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் சார்பில் தவிசாளர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டிருந்த இரு உறுப்பினர்களும் சமமான வாக்குகளைப் பெற்றமையினால், சீட்டுக் குலுக்கல் மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது, முஸ்லிம் காங்கிரசுக்கு தவிசாளர் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, சபையில் அமர்ந்திருந்த மு.கா. உறுப்பினர் தமீம் ஆப்தீன் தனது கதிரையை விட்டும் பெரும் சத்தமிட்டு மூர்க்கத்தனத்துடன் எழுந்து, அங்கிருந்த மேசைகளை காலால் உதைத்ததோடு, அன்சிலுக்கான மேசையில் அடித்து, காலால் உதைத்து மோசமாக நடந்து கொண்டார்.

மு.காங்கிரஸ் சார்பாக இம்முறை வெற்றியீட்டியுள்ள தமீம் ஆப்தீன் இதற்கு முன்னரும் இரண்டு தடவை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.

முதல் தடவை முஸ்லிம் காங்கிரஸ் மூலம் உறுப்பினரான ஆப்தீன், தேசிய காங்கிரஸ் கட்சிக்கு மாறியமையினால் அவரின் பிரதேச சபை உறுப்புரிமையை இழந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் மூலம் போட்டியிட்ட ஆப்தீன், இரண்டாவது தடவையாகவும் பிரதேச சபை உறுப்பினரானார்.

சமூக சேவை மற்றும் முன்னின்று மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட ஆப்தீன், சண்டித்தனம் மூலமாக தனது அரசியலை முன்னகர்த்த முயற்சிக்கும் இவ்வாறான தருணங்களில், படித்த மற்றும் வன்முறையினை விரும்பாத மக்களின் முகச் சுழிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறித்து கவனமாக சிந்திக்க வேண்டும்.

அன்சில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும், எந்த கட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவரின் உரிமையாகும். அதனை கேள்விக்குட்படுத்துவதற்கும், எதிர்ப்பதற்கும் ஆப்தீனுக்கு எவ்வித உரிமைகளும் கிடையாது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதல் அமர்வு நடைபெற்ற போது உள்ளுராட்சி சபை  அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இவ்வாறு ஆப்தீன் நடந்து கொண்டமையானது அருவருக்கத்தக்கதாகும்.

எனவே, ஆப்தீன் எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். மூன்று தடவை பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகித்த ஒருவரிடமுள்ள அரசியல் முதிர்ச்சியை ஆப்தீனிடம் காண ஆசைப்படுகிறோம்.

அதற்கு ஆப்தீனும் முயற்சிக்க வேண்டும்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்