‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்கள்

🕔 August 22, 2015
beggars - 98
ண்டுதோறும் வெளிவரும் உலக பணக்காரர்களின் பட்டியலை பார்த்தே, பெருமூச்சு விடும் நடுத்தர மக்கள் அதிகம். இப்போது அந்த பெருமூச்சை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் பிச்சைக்காரர்கள். பிச்சை எடுத்தே சமூகத்தில் பணக்காரர்களாக உயர்ந்த கதைகளை பத்திரிகை ஜோக்ஸ்களிலும், திரைப்படங்களின் வாயிலாகவும் நாம் பார்த்திருக்கிறோம். ஏதோ நகைச்சுவையாக எழுதப்பட்டதில்லை என்பதை சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று பொட்டில் அறைந்தாற்போல் கூறியிருக்கிறது. ஆம்! இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்காரர்களின் பட்டியலாக வெளியிடப்பட்டது அந்தப் புள்ளிவிவரம். இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் பிச்சை எடுத்தே கோடீஸ்வரர்களாக மாறியவர்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்.

பாரத் ஜெயின் 

இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர், மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். 49 வயதை எட்டியிருக்கும் இவருக்கு, மும்பையின் பரேல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சொந்தமாக இரண்டு வீடுகள் இருக்கின்றன. ஒரு வீட்டின் மதிப்பு 80 லட்சம் ரூபாய்க்கும் மேல். இந்தச்செய்திதான் மும்பை வாசிகளை, பாரத் ஜெயின் பக்கம் திருப்பி உள்ளது. இவர் சொந்தமாக ஒரு ஜூஸ் கடையும் வைத்திருக்கிறார். அதையும் வாடகைக்கு விட்டிருக்கிறார். இதன் மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் வருகிறது. இது தவிர பாரத் ஜெயினும், அவரது உறவினர்களும் சேர்ந்து பாடபுத்தகங்கள், விளக்க உரை அடங்கிய புத்தகங்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிலையும் நடத்தி வருகிறார்கள். இதற்கு பாரத் ஜெயின்தான் முதலாளி.இவ்வளவு சிறப்பான வளர்ச்சி கண்டுள்ள பாரத் ஜெயினுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்கிறீர்களா? வெறும் 8 கோடி ரூபாய்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், தனக்கு சொந்தமான இரண்டு வீடுகளையும் வாடகைக்கு விட்டு விட்டு, தனது வளர்ச்சிக்கு காரணமான பிச்சை எடுக்கும் தொழிலைத்தான் இப்போதும் அவர் செய்து வருகிறார்.

கிருஷ்ணகுமார் கீதே

இந்த பட்டியலில் 2-வது இடமும் மும்பையைச் சேர்ந்தவருக்குத்தான். இவரது பெயர் கிருஷ்ணகுமார் கீதே. இவருக்கு தினசரி கிடைக்கும் வருமானம் 3 ஆயிரம் ரூபாய். பட்டியல் தயார் செய்தவர்கள் இவரை பேட்டி கண்டபோது, ‘நான் தினமும் 6 மணி நேரம் மட்டுமே உழைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இவருக்கும் மும்பையின் புறநகர் பகுதியான நாலாசோப்ராவில் ஒரு வீடு இருக்கிறது. அதுவும் அடுக்குமாடி குடியிருப்பில்தான். ஆனால் இவர் அதை வாடகைக்கெல்லாம் விடவில்லை. தன் குடும்பத்தினருடன் வசதிகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார். இவரது சொத்து மதிப்பும் 3, 4 கோடிகளை தொட்டு விட்டதாம்.

சர்வாதி தேவி

 இந்தியாவின் மூன்றாவது பணக்கார பிச்சைக்காரர், சர்வாதிதேவி. இவர் பாட்னா நகர ரெயில்களில் கடந்த 9 ஆண்டு களாக பிச்சை எடுத்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமான
த்தை வைத்து மகளுக்கு ‘ஜாம்…, ஜாம்…’ என பாட்னாவே வியக்கும்படி திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். இவருக்கு ஒரே மகள் மட்டும்தான் என்பது பாட்னா பகுதியில் வசிக்கும் பல இளைஞர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா?.. சர்வாதி தேவி இன்சூரன்ஸ் பாலிசியும் கட்டிவருகிறார். அவர் வருடத்திற்கு பிரீமியமாக செலுத்தும் தொகை வெறும் 36 ஆயிரம் ரூபாய்தான். வாயப்பொளக்காதீங்க.


சம்பாஜி காலே


மும்பையில் இருந்து நான்காம் இடத்தைப் பிடித்திருப்பவர். இவருக்கு தினசரி வருமானமாக 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. மும்பையில் விரார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இது தவிர ஷோலாப்பூர் மாவட்டத்தில் சொந்தமாக இரண்டு வீடுகளை கட்டி வைத்துள்ளார். தற்போது அதற்கான வாடகை வந்து கொண்டிருக்கிறது. சம்பாஜி காலே, தன்னுடைய தொழிலை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வதாக கூறியிருக்கிறார். (இவ்வளவு வருமானம் வந்தா ஏன் பாஸ் மகிழ்ச்சி இருக்காது).

லட்சுமி தாஸ்

வங்கிக் கடன், கிரெடிட் கார்டு போன்றவற்றை வாங்குவது, இன்றும் கூட பலருக்கு முடியாத காரியம். இவற்றை வாங்குவதால் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தி விடும் அபாயம் இருப்பதும் பலர் இவற்றின் பக்கம் நெருங்காமல் இருப்பதற்கு காரணம். ஆனால் லட்சுமி தாஸிற்கு வங்கி சார்ந்த சகல உரிமைகளும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பணக்கார பிச்சைக்காரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடம் இவருக்கு. போலியாவால் பாதிக்கப்பட்டு ஊனமானதால், வேறு வழியின்றி பிச்சை எடுக்கத் தொடங்கியிருக்கிறார். 16-வயதில் தொடங்கியது. 64 வயதிலும் தொடர்கிறது. ஆரம்பத்தில் வயிற்றிற்கும் வாய்க்கும் செலவழித்த பணத்தை 20 வயதிற்கு மேல் சேமிக்க ஆரம்பித்துள்ளார். அப்படி 2 வருடமாக சேர்த்த தொகையை முன்பணமாக வங்கியில் செலுத்தி தனக்கென தனி கணக்கும் தொடங்கி இருக்கிறார். கணக்கில் பணமாக சேர.. சேர.. வங்கியில் இவரது செல்வாக்கும் உயர்ந்திருக்கிறது. இப்போது வங்கியின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

இவரிடம் இல்லாத கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வகைகளே இல்லையாம். கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் எளிமையாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.சமீபத்தில் வலைத்தளத்தில் ஒரு நகைச்சுவை வெளியாகியிருந்தது. அதில் ஒரு வீட்டில் பிச்சை கேட்டு செல்பவரிடம், அந்த வீட்டின் உரிமையாளர் ‘சில்லரை இல்லை’ என்று கூறுவார். அதற்கு அந்த பிச்சைக்காரர், ‘ஐயா! என்னிடம் ஸ்வைப்பிங் மிஷின் (swipping)இருக்கிறது. உங்களிடம் உள்ள ஏ.டி.எம். கார்டு அல்லது கிரெடிட் கார்டை கொடுங்கள். நீங்கள் கூறும் பணத்தை அதில் இருந்து எடுத்துக் கொள்கிறேன்’ என்கிறார்.மேற்கண்ட செய்தியைப் பார்க்கும்போது, இந்த நகைச்சுவை மெய்யாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

நன்றி: தினத்தந்தி

Comments