சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல

🕔 March 22, 2018

திர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தனின் நாடாளுமன்றத்திலுள்ள ஆசனத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்ததால், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

அப்போது சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சபையில் இருக்கவில்லை.

இந்த நிலையில், மஹிந்த ஆசனம் மாறி இருக்கின்றமையை நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் பார்த்து விட்டு, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவிடம், தவறான ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருக்கும் விடயத்தை அறிவித்துள்ளார்.

சனத் நிசாந்த உடனடியாக மகிந்தவுக்கு அருகே சென்று, ஆசனம் மாறி அமர்ந்திருப்பதை தெரிவித்தார். உடனடியாக மகிந்த ராஜபக்ஷ சம்பந்தனின் ஆசனத்தை விட்டு எழுந்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டுள்ளார்.

இதனைக் கவனித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்ட மகிந்தவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை ஒன்றிணைந்த எதிரணி மேற்கொண்டு வரும் நிலையில், சம்பந்தனின் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தமை பேசு பொருளாக மாறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்