மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு

🕔 August 22, 2015

Rishad - 087
– முன்ஸிப் –

கில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் – அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, இதனை அவர் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஐ.தே.கட்சியிடமிருந்து கிடைக்கப்பெறும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பரிமையை, தனக்கு வழங்குமாறு, கட்சித் தலைவர் றிசாத் பதியுத்தீனிடம் செயலாளர் ஹமீட் கோரிக்கை விடுத்திருந்தார். ஆயினும், அந்தக் கோரிக்கையினைப் புறக்கணித்த றிசாத் பதியுத்தீன், வடமேல் மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் நவவிக்கு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொடுத்தார்.

இதனால்  ஏமாற்றமும், ஆத்திரமுமடைந்த அ.இ.ம.காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், தன்னை றிசாத் பதியுத்தீன் ஏமாற்றி விட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்ததோடு, றிசாத் பதியுத்தீனை அ.இ.ம.காங்கிரசின் தலைமைப் பதவியிருந்து நீக்கி விட்டதாகவும் அறிக்கை விட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, அ.இ.ம.காங்கிரசின் செயலாளர் பதவியிலிருந்து வை.எல்.எஸ். ஹமீட் நீக்கப்பட்டுள்ளதாக,  இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, றிசாத் பதியுத்தீன் அறிவித்தார்.

அ.இ.ம.காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே, இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் றிசாத் பதியுத்தீன் இதன்போது மேலும் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அ.இ.ம.காங்கிரசின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலி மற்றும் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். Rishad -056

Comments

புதிது பேஸ்புக் பக்கம்