ஆனந்த சங்கரிக்கு எதிராக, அவரின் கட்சித் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

🕔 March 2, 2018
– பாறுக் ஷிஹான் –

மிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியத்தினால் இந்த முறைப்பாடு இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

அங்கு சென்ற கட்சியின் தலைவர் சிவசுப்பிரமணியம், ஏன் தலைவருக்கும் பொருளாளருக்கும் அறிவிக்காது கலந்துரையாடல் நடாத்துகின்றீர்கள்? இவ்வாறு நடப்பது சரியானதா என கேட்ட போது, அவரை செயலாளர் ஆனந்தசங்கரி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஏற்கனவே, உடல் சுகயீனமுற்றுள்ள சிவசுப்பிரமணியம் உடனடியாக வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், தான் இந்த சம்பவம் தொடர்பாக, கனடாவுக்குச் சென்ற பின்னர் வழக்குத் தொடர்வது தொடர்பாக முடிவெடுப்பதாகவும் சிவசுப்பிரமணியம் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Comments