நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

🕔 February 18, 2018

பிணைமுறி மோசடி சந்தக நபர்களில் ஒருவரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக, சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை அவர் புறக்கணிப்பாராயின் இந்த நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியில் ஈடுபட்டார்கள் எனும்  சந்தேகத்தின் பேரில் அர்ஜூன் மகேந்திரனின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் கடந்த 15ஆம் திகதிக்கு முன்னர், அவர் ஆஜராக வேண்டும் என, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆயினும், அவர் அதனைப் புறக்கணித்தமையினால், எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதிக்கு முன்னர், குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் அவர் முன்னிலையாக வேண்டும் என்று, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜையென்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவர் இலங்கையை விட்டும் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்