மாயாஜாலம்

🕔 February 14, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. அதிக வட்டாரங்களை வெற்றிகொண்ட கட்சிக்காரர்கள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நடைபெற்று முடிந்த தேர்தலானது, தேசிய ரீதியாக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அரசாங்கத்திலுள்ள இரண்டு பெருந்தேசியக் கட்சிகளை விடவும், மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சி, அதிகளவான சபைகளை வென்றிருக்கிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடும் போது, ஐக்கிய தேசியக் கட்சி – வெற்றி நோக்கி நகரும் என்கிற நம்பிக்கைகள், பாரியளவில் அடிவாங்கியிருக்கின்றன.

தளம்பல்

இன்னொருபுறம், கணிசமான சபைகளில் எந்தவொரு தரப்பும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், எதிர்பாராத கூட்டாட்சிகளுக்கான சாத்தியங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த அரசியல் கலவரங்களுக்கிடையில், முஸ்லிம் கட்சிகளும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த உள்ளூராட்சி சபைகளில், ஜாம்பவான்களாகத் திகழ்ந்த முஸ்லிம் கட்சிகள், புதிய தேர்தல் முறைமை காரணமாக, பலவீனப்பட்டுப்  போயுள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகளுக்கு, இந்தத் தேர்தலில் என்ன நடந்திருக்கிறது என்பதை வைத்து, முஸ்லிம் அரசியலின் தற்போதைய நிலைவரத்தை ஏதோவொரு வீதத்தில் விளங்கிக்கொள்ள முடியுமாக இருக்கின்றது.

முஸ்லிம் அரசியல்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், இம்முறை பல முஸ்லிம் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாகக் களமிறங்கியிருந்தன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து, யானைச் சின்னத்தில் போட்டியிட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் – மயில் சின்னத்தில் போட்டியிட்டன. தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவை, தத்தமது கட்சிச் சின்னங்களில் தனித்தனியாக களமிறங்கின. இவை தவிர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போன்றவையும் போட்டியில் குறித்திருந்தன.

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் பெரும்பான்மையினைக் கொண்ட 08 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம், நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகள், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை மாநகர சபைகளே அவையாகும். இவற்றில், கடந்த முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 05 சபைகளை மு.காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது.

அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் வென்றிருந்தது. சம்மாந்துறை பிரதேச சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்திருந்தது.

தலைகீழ் கணக்கு

ஆனால், இம்முறை நடைபெற்ற தேர்தலில், நிலைமைகள் தலைகீழாகியுள்ளன. அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை மட்டும் தேசிய காங்கிரஸ் கைப்பற்றி, தனியாட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில், அவரது அரசியல் ஆதிக்கம் இன்னுமிருக்கிறது என்பதை, இந்த வெற்றி நிரூபித்திருக்கிறது.

இவை தவிர, வேறு எந்தவொரு சபையிலும் எந்தவொரு தரப்பும் தனித்து ஆட்சியமைக்கும் நிலைவரம் இல்லை என்பது, அம்பாறை மாவட்ட அரசியல் தெரிந்தவர்களுக்கு வியப்பான செய்தியாகும். குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸின் தளம் மற்றும் கோட்டை என்று வர்ணிக்கப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில், அந்தக் கட்சியினால் எந்தவொரு சபையிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாததொரு நிலை உருவாகியிருப்பது, அந்தக் கட்சியல்லாதோருக்குக் கூட பேரதிர்ச்சியான தகவலாகவே இருக்கும்.

அதுவும், கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரத்தின் கீழ் இருந்த உள்ளூராட்சி சபைகள், முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளின் கூட்டாட்சியின் கீழ், இம்முறை செல்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

உதாரணமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபை, கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸினது ஆட்சியின் கீழ் இருந்தது. இம்முறை இந்தச் சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸானது, யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 08 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, தேசிய காங்கிரஸ் 06 ஆசனங்களையும் மயில் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும் வென்றெடுத்துள்ளன. இவற்றுக்கிடையில், மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சியும் ஓர் ஆசனத்தைப்  பெற்றுள்ளது.

அந்த வகையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.காங்கிரஸ் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ள போதும், பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளது. அதனால், அந்தக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அதேவேளை, கூட்டாட்சி அமைப்பதற்கான சாத்தியங்களும் மு.காங்கிரஸுக்கு வெகு குறைவாகவே உள்ளது. காரணம், அந்த சபையில் ஆசனங்களைப் பெற்றுள்ள ஏனைய கட்சிகள் அனைத்தும், மு.காங்கிரஸுக்கு எதிரானவையாகும்.

எனவே, மு.காவுடன் அந்தக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியம் பெருமளவில் இல்லை. எனவே, முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் இணைந்து, அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கான சாத்தியமொன்று உருவாகியுள்ளது. தேசிய காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இணைந்து, பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமாயின், அங்கு மு.காங்கிரஸுக்கு எதிரான கூட்டாட்சியொன்று உருவாகும்.

வீழ்ச்சி

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அநேகமான உள்ளூராட்சி சபைகளில், இவ்வாறான  நிலைவரங்கள்தான் காணப்படுகின்றன. அக்கரைப்பற்று சபைகள் தவிர்ந்த அனைத்து சபைகளிலும் கூட்டாட்சிதான் சாத்தியமாகும். ஆனால், மு.காங்கிரஸ் கூட்டாட்சி அமைப்பதற்கான அறிகுறிகள் அதிகமான சபைகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்னொருபுறம், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையுள்ள எந்தவோர் உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் பெறவில்லை என்பதும், இங்கு குறித்துச் சொல்ல வேண்டிய மற்றுமொரு செய்தியாகும்.

அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள வாக்குகளை விடவும், மு.காங்கிரசுஸுக்கு எதிராகக் கிடைத்துள்ள வாக்குகளே அதிகமாக உள்ளன. அதாவது, முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினர், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக தமது வாக்குகளைப் பிரயோகித்திருக்கின்றனர். இது கவனத்துக்குரிய விடயமாகும்.

முஸ்லிம் மக்களின் பிரதான அரசியல் கட்சி எனும் அடையாளத்தைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் தனது தளமான அம்பாறை மாவட்டத்தில் பாரியளவான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாகத் தனித்துக் களமிறங்கிய தேர்தலாக, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலைக் குறிப்பிடலாம். அந்தத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் 83,685 வாக்குகளை மு.காங்கிரஸ் பெற்றது. அப்போது அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 441,287 ஆகும். அதாவது, 18.95 வீதமான வாக்குகளை 2012ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில் மு.கா பெற்றிருந்தது.

இம்முறை, அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 63,142 வாக்குகள் மு.காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, 493,742 ஆகும். அந்த வகையில், 12.78 வீதமான வாக்குகளைகள்தான் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் மு.கா பெற்றுள்ளது. இந்தக் கணக்கின்படி, மு.காங்கிரஸின் வாக்கு வங்கி, அம்பாறை மாவட்டத்தில் 6.17 சதவீதத்தினால் வீழ்ந்துள்ளது.

இதை இன்னொரு வகையிலும் விளங்கிக்கொள்ள முடியும். அதாவது, 2012ஆம் ஆண்டு மு.கா பெற்றுக்கொண்ட வாக்கு வீதத்துக்கிணங்க, இம்முறை பெற்றிருக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை 93,564ஆக அமைந்திருத்தல் வேண்டும். ஆனால், 63,142 வாக்குகள்தான் அந்தக் கட்சிக்குக் கிடைத்திருக்கின்றன. அதுவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துதான் இந்தத் தொகையைப்  பெற்றுள்ளதென்பது வேறு கதையாகும். அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தாலும், 30,422 வாக்குகளை, கடந்த கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் பின்னர் மு.காங்கிரஸ் இழந்திருக்கிறது.

மேற்சொன்ன வீழ்ச்சியின் காரணமாகத்தான், தற்போது அம்பாறை மாவட்டத்தில் எந்தவோர் உள்ளூராட்சி சபையிலும், தனித்து ஆட்சியமைப்பதற்கான வெற்றிகளை, முஸ்லிம் காங்கிரஸினால் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

விளைவுகள்

முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறானதொரு வீழ்ச்சியைச் சந்திப்பதற்கு என்ன காரணம் என்பதை எல்லோரும் அறிவர். மு.காங்கிரஸிலிருந்து அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.டி.ஹசனலி ஆகியோர் வெளியேறியமை, பிரதான காரணமாகும். மேலும், மு.காங்கிரஸ் தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் இன்னுமொரு காரணமாகவும் உள்ளது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் – அரசியலை உணர்வுபூர்வமாக எதிர்கொள்வதிலிருந்து, அறிவுபூர்வமாக எதிர்கொள்ளும் மாற்றத்துக்குத்  தயாராகி வருகின்றமையை விளங்கிக்கொள்ள முடிகிறது. கண்மூடித்தனமான கட்சி அபிமானத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விடுபட்டுக் கொண்டிருப்பதை, தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர், ம.காங்கிரஸை மறுசீரமைக்க வேண்டிய தேவையுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் தெரிவித்திருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

விரும்பியோ விரும்பாமலோ அந்தக் காரியத்தை அவர் செய்தேயாக வேண்டிய நிலைவரத்தினைத்தான், தேர்தல் முடிவுகள் ஏற்பட்டுத்தியுள்ளன. ஆனால், அது எவ்வாறான மறுசீரமைப்பு என்பதில்தான் மு.காங்கரஸின் எதிர்காலம் தங்கியுள்ளது.

வண்ணத்துப் பூச்சி

இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் முன்னாள் செயலாளர் எம்.ரி. ஹசனலி ஆகியோர் தற்போது தலைமை வகிக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சி தனியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் கூட்டமைத்துக் களமிறங்கிய இடங்களில் கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள் குறித்தும், முஸ்லிம் அரசியல் அரங்கில் அதிக கவனிப்புகள் உருவாகியுள்ளன.

அந்த வகையில், பசீர் மற்றும் ஹசனலி தரப்பினருக்குக் கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள், அரசியலரங்கில் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளன. பசீர் மற்றும் ஹசனலி ஆகியோர் தலைமை வகிக்கும் வண்ணத்துப் பூச்சியைச் சின்னமாகக் கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு – இம்முறை முதன்முதலாக சில உள்ளூராட்சி சபைகளில் தனித்துக் களமிறங்கியது.

அந்த வகையில், அக்கட்சிக்கு கொழும்பு மாநகரசபையில் 02 ஆசனங்களும் ஏறாவூரில் 02 ஆசனங்களும், கற்பிட்டியில் ஓர் ஆசனமும் கிடைத்துள்ளன. இந்தக் கட்டுரை எழுதும் போது தெஹிவளை – கல்கிஸை உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கவில்லை. ஆனால், அங்கும் அந்தக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னொருபுறம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு இணைந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் மேற்படி கட்சிகள் இணைந்து மயில் சின்னத்தில் போட்டியிட்டன.

இதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அனைத்து சபைகளிலும் இந்தக் கூட்டணி கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதனால், இந்தக் கூட்டணியின் உதவியுடன்தான் அநேகமான சபைகளில் கூட்டாட்சி அமையும் சாத்தியங்களும் உருவாகியுள்ளன. அவ்வாறு கூட்டாட்சி அமையும் பொழுது, இந்தக் கூட்டணியைச் சேர்ந்தவர்களில் கணிசமானோருக்கு, தவிசாளர் பதவி கிடைக்கும் வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிகிறது.

நிலைவரம்

இவற்றையெல்லாம் கூர்ந்து கவனிக்கையில், இந்தத் தேர்தலையடுத்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் அரங்கில் பல்வேறு விடயங்கள் நிகழ்ந்திருப்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஏகபோக அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது.

பன்மைக் கட்சிகளின் அரசியலுக்கான சாதக சூழ்நிலை உருவாகியுள்ளது.

மக்களை உணர்வுபூர்வமானதொரு மயக்கத்தில் வைத்துக் கொண்டு, தொடர்ந்தும் அரசியல் செய்ய முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல் கட்சிகளை விட்டும், பெருந்தேசியக் கட்சிகளை நோக்கி மக்கள் விலகத் தொடங்கியுள்ளனர். (பொத்துவில், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, இறக்காமம் உள்ளிட்ட சபைகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆசனங்களை வென்றெடுத்துள்ளமை இதற்கு உதாரணமாகும்) இப்படி ஏராளமான மாற்றங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

முஸ்லிம் கட்சிகள் மீதான அவநம்பிக்கை, முஸ்லிம் மக்களிடம் தொடர்ந்தும் வளர்ந்துகொண்டே செல்லுமாயின், ஒரு காலகட்டத்தில், இலங்கை அரசியலின் தொடக்கத்தில் இருந்தாற்போல், பெருந்தேசியக் கட்சிகளை அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஆதரிக்கும் நிலைவரம் ஏற்படக் கூடும்.

இந்த மாயாஜாலம் நடப்பதற்கும் வெகு காலம் எடுக்காது.

நன்றி: தமிழ் மிரர் (13 பெப்ரவரி 2018)

Comments