அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில்

🕔 January 28, 2018

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தால்தான், அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுக்க முடியும் என்கிற சூழ்நிலையை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு, தாங்கள் ஏற்படுத்தி விட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.

பாலமுனை ஹுசைனியாநகரில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு சட்டத்தரணி அன்சில் மேலும் கூறுகையில்;

“தலைவர் அஷ்ரபுக்கு நன்றிக்கடன் செலுத்துவதாகவிருந்தால் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமை ஒருமுறையேனும் தோற்கடிக்க வேண்டும்.

தலைவர் அஷ்ரபுடைய கட்சியாக முஸ்லிம் காங்கிரசை மீளக்கொண்டு வருதல் வேண்டும். தலைவர் அஷ்ரபுடைய கொள்கையை தைரியமாக எடுத்துச்சொல்ல வக்கில்லாத ஹக்கீம், எப்படி அஷ்ரபுடைய கட்சியின் தலைவராக இருக்க முடியும் என்று கேட்க விரும்புகிறேன்.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுமா? இணைக்கப்படாதா? இணைப்பு என்பது சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பதைப்பற்றி பேசுவதற்காக, ஹக்கீமை மு.காங்கிரசுக்கு நாங்கள் தலைவராக்கவில்லை.

வடக்கும் கிழக்கும் இணைந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து உள்ளது. ஏலவே இணைந்திருந்தபோது எத்தனையோ ஆபத்தக்கள் நேர்ந்தன. பிரிக்கப்பட்டபோது அந்த ஆபத்துக்களில் இருந்து மீண்டிருக்கிறோம். மீண்டும் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு எமது முதுகில் அடிமைச்சாசனம் எழுதப்படுகின்ற நிலமை வந்துவிடக்கூடாது என்று, மிகத் தைரியமாக பேசுகிற ஒருவர்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருக்க முடியும்.

 1987, 88 மற்றும் 89காலப்பகுதியில் இப்பிரதேசங்களில் பேசிய அஷ்ரப்; வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச்சாசனம் என்று கூறியமை இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. அவ்வாறு பேசுகிற தலைமையாக ஹக்கீம் இருக்கின்றாரா?

மூன்று விடயங்களை நிறைவேற்றாது விட்டால், புதிய அரசியலமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொல்லுகின்றார். அவற்றில் முதலாவது மாகாண சபைக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் ஒருபோதும் மீளக் கையேற்கப்படக் கூடாது. இரண்டாவது – வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். மூன்றாவது விடயம், இணைக்கப்பட்ட மாகாணங்களுக்கு  நீதி தொடர்பான அதிகாரங்கள்வழங்கப்பட வேண்டும்  என்பவையாகும்.

மு.காவின் தலைவராகி 17 வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு வீட்டைத்தானும் இந்த மக்களுக்கு கட்டிக்கொடுக்காத ரஊப் ஹக்கீம்; இப்போது ஆயிரம் வீடுகளை கட்டப்போவதாகச் சொல்லி வாக்கு கேட்கின்றார்கள். ஒவ்வொருவீடாக சென்று இப்படி பொய் சொல்லி வாக்குகேட்கின்றனர்” என்றார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்