றிசாட் மீது குற்றம் சுமத்தி, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம்

🕔 December 28, 2017

டக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியாகவே, விலத்திக்குளம் காடு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்புபட்டுள்ளார் எனவும் பரப்பப்படும் செய்திகளைப் பார்க்க முடிவதாக வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

கணக்காளர் நாயகத்தின் அறிக்கையினை மேற்கோள் காட்டி, மேற்படி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இதனைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், விலத்திக்குளத்தில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளமை தொடர்பில், இனவாத ஊடகங்கள் வெளியிட்டு வரும் பொய்யான செய்திகள் குறித்து, தமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிசாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் பல வருடங்களாக  முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை  மீண்டும் ஆரம்பித்துள்ளனர். 03 தசாப்தங்களுக்கு மேலாக அகதி என்ற முத்திரையோடு தமது இருப்பிடத்தை இழந்து ஓலைக்குடிசையில் வெயிலிலும், மழையிலும் பல சொல்லொனாத்துயரங்களோடு வாழ்ந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் தமது சொந்த பிரதேசங்களுக்கு மீள்குடியேறப் புறப்பட்ட காலம் முதல் அவர்களுக்கு எதிரான இனவாதிகளினதும் இனவாத ஊடகங்களினதும் பொய்ப்பிரச்சாரம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

மக்களின் வாழ்விடத்தை வனமாக அறிவித்தமை

2010 ஆம் ஆண்டு அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா அவர்களினால் யுத்தம் முடிவடைந்தவுடன் கொழும்பிலிருந்து ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் மூலம் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசத்தை வனந்தரமாக பிரகடணப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயம். இங்கு ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தியது மட்டுமல்லாது அந்த பிரதேச மக்களுக்கோ, அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ அறிவிக்காமல் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி – முசலி மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த மற்றும் விவசாயம் செய்த காணிகளை வனப்பிரதேசத்துக்கு சொந்தமானது என்று முற்றிலும் பிழையாக தெரிவித்திருந்தது.

இவ்வாறு மக்கள் வாழும் அல்லது வாழ்ந்த பிரதேசத்தை வனமாக பிரகடனப்படுத்துவதாக இருந்தால், உரிய முறையில் அப்பிரதேச மக்களுக்கு, குறித்த மாவட்ட அரச அதிபருக்கு, குறித்த பிரதேச செயலாளருக்கோ அறிவிக்கப்படாமை முற்றிலும் தவறானது.

அரசாங்கம் அனுமதித்தது

யுத்தத்தின் பிற்பாடு அரசாங்கத்தின் அனுமதியுடன்தான் முஸ்லிம்கள் குடியேறினர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஜனாதிபதி விசேட செயலணி ஊடாக, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளரின் கண்காணிப்பிலே காணிகள் வழங்கப்பட்டன. மேற்படி விசேட செயலணி முன்னாள்  ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டது.

அக்காலப்பகுதியில் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக இருந்த அமைச்சர் றிசாட் பதியுதீன், அந்த மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியேற்ற அரசாங்கத்திடம் காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பதில் என்ன தவறு உண்டு? காணியை அரசாங்கம் பகரிந்தளித்ததன் பின்னர் அவர்களுக்குரிய வீடுகள் அமைப்பதற்குரிய நிதியை வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியோடும் அமைச்சர் தனது அயராத முயற்சியாலும் அரச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தினார்.

றிசாட் மீது பொய்யான குற்றம்

இவற்றை அவதானித்த இனவாதிகள் அமைச்சர் றிசாட் வில்பத்தை அழித்து விட்டதாகவும், மன்னாரில் அரபுக் கொலனி உருவாக்குவதாகவும் கட்டுக்கதைகளை கிளப்பி விட்டனர். அன்றிலிருந்து இனவாதிகள் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல. பல வழக்குகள், பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வடக்கிலே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுத்து நிறுத்த அவர்கள் எடுத்த பிரயத்தனம் எண்ணிலடங்காதவை.

வில்பத்து வனப்பகுதி மன்னார் மாவட்டத்துக்கு வெளியிலே புத்தளம், அனுராதபுரம் மாவட்டங்களிலே அமைந்துள்ளது. வில்பத்தை அமைச்சர் றிசாட்டோ முஸ்லிம்களோ அழிக்கவில்லை என்று  ஆதாரபூர்வமாக நிரூபித்த பின்னர்,  தற்போது விலத்திக்குளம் வனம் அழிக்கப்பட்டுள்ளதாக போலிப்பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் முசலி மக்களின் மீள் குடியேற்றத்துக்காக, 03 தசாப்தங்களாக காடாகிப் போன அவர்களது காணியை உரிய முறையில் வழங்குமாறு வேண்டுகோள் விடுப்பதில் என்ன குற்றம் உள்ளது?

அகதியாக விரட்டப்பட்ட மக்களில் தானும் ஒருவராக சென்ற அமைச்சர், அந்த மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு, அரசாங்கத்திடம் அம்மக்களுக்கான காணிகளை வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை சில ஊடகங்கள் பிழையென்று செய்தி வெளியிட்டுள்ளன. இதனை எமது அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. வன்னி மாட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் வடக்கு முஸ்லிம்களின் பிரதிநிதி என்றவகையில் அவர்களுடைய பிரச்சினையைத் தீர்த்துத் தரும்படி அரசாங்கத்திடம் வேண்டினாரே தவிர, அமைச்சர் தானாக எதையுமே செய்யவில்லை. மேலும் அரசாங்கம் அதனை முறைப்படியே செய்துள்ளது.

தவறான விளக்கம்

சில ஊடகங்கள் விலத்திக்குளம் பிரதேசம் தொடர்பாக கணக்காளர் நாயகம், சபாநாயகருக்கு கையளித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, விலத்திக்குளம் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட மக்கள் புத்தளம் மாவட்ட மக்கள் என்றும், விலத்திக்குளம் பகுதிகளில் மக்கள் வாழவில்லை என்றும் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொய்யானது. விலத்திக்குளம் என்பது பெரிய விவசாயக்கிராமம். அங்கு மக்கள் விவசாயம் செய்த விவசாய நிலங்கள் என்பன இன்றும் காணப்படுகின்றது. மக்கள் இன்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதோடு, மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றமையும் உண்மையாகும்.

30 ஆண்டுகளாக புத்தளத்தில் வாழ்ந்த மக்களின் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் முதல் வசிப்பிடம் அனைத்தும் புத்தளம் என்றே காணப்படும். அகதிகளாக வாழ்ந்த பிரதேசத்தின் பெயர் இருக்கின்றது என்ற காரணத்தினால், அந்த மக்களின் பூர்வீகம் விலத்திக்குளம் இல்லை என்று ஆகாது. இவர்கள் வெளியிட்ட பிழையான அறிக்கையையும் ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தையும் நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நியாயபூர்வமாக நடைபெற அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இனவாதிகளிகளும், இனவாத ஊடகங்களும் முஸ்லிம்களின் 03 தசாப்த அகதி வாழ்வை மதித்து நடுநிலையாக செயற்பட வேண்டும்.

மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்

கணக்ககாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக ஊடகங்களில் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம் இவ்வறிக்கை முழுமையாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் அறிக்கையாகவே நாம் காண்கின்றோம். வில்பத்து வனாந்தரப் பகுதியினுள அமைந்துள்ள விஜய கம்மான, பூக்குளம், கஜுவத்த இவைகளே வில்பத்துவில் காடழிக்கப்பட்ட பிரதேசங்கள். ஆனால் கணக்காளர் நாயகத்தின் அறிக்கையில் ஏன் இது தொடர்பாக பேசப்படவில்லை? இது முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்படும் சதியா? என்று எண்ணத்தோன்றுகின்றது.

அதுமட்டுமல்லாது வவுனியாவில் கலாபோகஸ்வெவ, நாமல்கம போன்ற பிரதேசங்கள் முழுமையாக காடழிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட பிரதேசங்கள். இங்கு பல்லாயிரம் மக்கள் வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் தொடர்பாக ஊடகங்கள் ஏன் பேசுவதில்லை, ஊடகங்கள் இது தொடர்பாக ஆராயாமல் முஸ்லிம்கள் தொடர்பாகவும் அமைச்சர் றிசாட்டை குறிவைத்துத் தாக்கும் விதமாகவும் மேற்கொள்ளும் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்நடவடிக்கை தொடர்பாக முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வொன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் வடக்கு முஸ்லிம்கள் வீதிக்கு இறங்குவார்கள் என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்