வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி;

🕔 August 13, 2015

Ismail - 01– முன்ஸிப் –

கில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவினை,   இன்று வியாழக்கிழமை – மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா என்பவர், வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிராக மேற்படி றிட் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அரசியலமைப்பு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தாபனக்கோவை ஆகியவற்றை மீறிய நிலையில், மேற்படி இஸ்மாயில் என்பவர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், தான் வகித்து வந்த சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியினை ராஜிநாமாச் செய்யாத நிலையிலேயே,  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்ததாக, குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிணங்க, இஸ்மாயில் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்குத் தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்துமாறும், வேட்பாளர் இஸ்மாயிலை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தக் கூடாது என்று ஆணையிடுமாறும், மேற்படி றிட் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேட்பாளர் இஸ்மாயில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வகித்து வந்த சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியினை, அவர் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஜுலை 22 ஆம் திகதிதான் – ராஜிநாமாச் செய்தார் என்பதை, பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மன்றில் ஏற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், மனுவினை ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விஜித் மலல்கொட, சம்மந்தப்பட்ட மனுவினை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

குறித்த வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னதாக, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது அந்தப் பதவியினை வறிதாக்குவதற்கோ நீதிமன்றத்தால் முடியாது எனத் தெரிவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விஜித் மலல்கொட, குறித்த வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், அவரின் பதவிக்கு எதிராக வழக்கொன்றினைத் தாக்கல் செய்வதற்கு, சட்டத்தில் ஏற்பாடுகள் இருக்குமாயின், அதை மேற்கொள்வதற்கு உரிமை உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த வழங்கில் வழக்காளி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரும், பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் ஆஜராகியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்