அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

🕔 December 8, 2017

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பான கூட்டம், கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதில், பிரதியமைச்சர் பைசல் காசிம், கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், அண்மையில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தனர்.

மு.கா. தலைமையினால் வாக்களிக்கப்பட்டமைக்கு இணங்க, அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனு சமர்ப்பிப்பதற்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த மரச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அந்த தீர்மானங்கள் அமைந்திருந்தன.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நேற்று நிந்தவூருக்கு சென்றிருந்த அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், அங்கிருந்த கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரிடம் தமது தீர்மானங்கள் குறித்து ஞாபகப்படுத்தியதோடு, வேட்புமனுக்கான உறுப்பினர்கள் பட்டடியலை தயாரிப்பதற்கு முன்பாக, அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் தன்னால் எதையும் கூற முடியாது என்றும், தேசியப்பட்டியல் விடயத்தில் தலைவர்தான் தீர்மானிப்பார் எனவும், கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறினார்.

இதனையடுத்து, அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு – ஒரு கட்டத்தில் ஆத்திரமடைய, அங்கு பாரிய கூச்சல் குழுப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாமல், உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை தாங்கள் வழங்கப் போவதில்லை என்று, அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் கூறினார்கள்.

இதன்போது, அங்கிருந்த மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரமுகரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான பளீல் பி.ஏ; மு.காங்கிரசின் செயலாளரிம் சென்று, அட்டாளைச்சேனையில் மு.கா. சார்பாக போட்டியிட தயாராகவுள்ள வேட்பாளர்களின் பட்டியலொன்று தன்னிடம் உள்ளதாகக் கூறி, அவ்வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை அங்கு சமர்ப்பித்தார்.

பளீல் பி.ஏ.யினுடைய இந்த நடவடிக்கை, அங்கிருந்த அட்டாளைச்சேனை மத்திய குழுவினரை மேலும் ஆத்திரமடையச் செய்ய, நிலைமை மேலும் மோசமானது.  பளீல் பி.ஏ.யை, அட்டாளைச்சேனை மத்திய குழுவைச் சேர்ந்த சிலர், கடுமையாக ஏசிப் பேசியதாகவும், தாக்குவதற்கு முற்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இறுதியில், அட்டாளைச்சேனைக்கான வேட்பாளர் தெரிவு நடவடிக்கையை பகிஸ்கரித்து, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், பளீல் பி.ஏ. வழங்கிய வேட்பாளர் பட்டியலை மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் பெற்றுக் கொண்ட போதிலும், அதனை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் தீர்மானிப்பார் என, கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்