கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம்

🕔 December 7, 2017

– மப்றூக் –

லுவில் பிரதேசத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர், அலையில் அள்ளுண்டுண்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

ஒலுவில் 04ஆம் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய அபுசாலி இப்றாகிம் என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

ஒலுவில் வெளிச்ச வீட்டு பகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்காக படகு ஒன்றில் இருவர் கடலுக்குச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், மீன்களைப் பிடித்துக் கொண்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, பாரிய அலையொன்று அடித்ததால் படகிலிருந்த மேற்படி நபர், அலையில் அள்ளுண்டு கடலில் காணமல் போயுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், காணாமல் போனவரின் உறவினர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்தில் காணாமல் போனவர் 04 பிள்ளைகளின் தந்தையாவார்.

இதேவேளை, தற்போது கடல் சீற்றமாகக் காணப்படுகின்றமையினால், காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாத நிலைவரம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வானிலை குழப்பகரமாகவும், கடல் சீற்றத்துடனும் காணப்படுகின்றமையினால் கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என, அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நிலையிலேயே, இந்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்