உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

🕔 December 3, 2017

– அஹமட் –

ள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கி தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், இதனை மு.காங்கிரசின் பிரதேச முக்கியஸ்தர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மு.காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்திலேயே களமிறக்கவுள்ளது.

எவ்வாறாயினும், ஐ.தே.கட்சியுடன் இணைந்து மு.காங்கிரஸ் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில், மு.காங்கிரசின் உயர்பீடத்தில் எதுவித அங்கீகாரமும் பெறப்படவில்லை என, உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மு.கா. தலைவர் ஹக்கீமுடைய தனிப்பட்ட விருப்பதற்கு அமைவாகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹக்கீமுடைய இந்தத் தீர்மானம் குறித்து, மு.காங்கிரசின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிடம் – தமது கட்சி அடகு வைக்கப்பட்டு விட்டதாக முஸ்லிம் காங்கிரசின் தொண்டர்கள் தெரிவித்து வருவதோடு, ஹக்கீமுடைய இந்த முடிவு குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக தமது எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்