ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம்

🕔 November 17, 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அவரின் குடும்பத்தாரும், பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் அலோசியசுடன் 750 தடவைக்கும் மேல் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளனர் என, குறித்த விவகாரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தொலைபேசி ஊடான தொடர்புகள் 05 பெப்ரவரி 2015 தொடக்கம் 20 ஜுன் 2017 வரை இடம்பெற்றுள்ளன.

இவற்றில் ரவி கருணாநாயக்கவுக்கும் அர்ஜுன் அலோசியசுக்கும் இடையில் 387  தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் சர்ச்சைக்குரிய பிணை முறி வழங்கல் நடைபெற்ற காலத்தில் மட்டும் 84 தொலைபேசி உரையாடல்கள் இவர்களுக்கிடையில் நடைபெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

மேலும் ரவி கருணாநாயக்கவின் மனைவி மேலாவுவுக்கும் அர்ஜுன் அலோசியசுக்கும் இடையில்  320 தடவை தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதேவேளை ரவி கருணாநாயக்கவின் மகள்களான ஒனெல்லா மற்றும் செனெல்லா ஆகியோருக்கும்  அலோசியசுக்கும் இடையில  23 தடவை உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவிடம், ஏற்கனவே ரவி கருணாநாயக்க வாக்கு மூலம் வழங்கிய போது, அர்ஜுன் அலோசியசுக்கும் தனக்குமிடையில் எந்தவித நெருங்கிய தொடர்பும் இல்லை எனக் கூறியிருந்தார். மேலும், ஓரிரு தடவை குடும்ப ஒன்று கூடல்களில் அர்ஜுன் அலோசியசை தான் சந்தித்திருந்தாகவும் ரவி தெரிவித்திருந்தார்.

சந்தேக நபர்களின் தொலைபேசி குறுஞ்செய்திகளில் ‘Ravi k, ‘Hon. Ravi’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அர்த்தம் என்னவென்று தனக்கு தெரியாது எனவும், அர்ஜுன் அலோசியசுடன் சிங்கப்பூருக்கு பயணித்தமை தற்செயலாக நடைபெற்ற ஒரு விடயம் என்றும், ஆணைக்குழு முன்பாக ரவி கருணாநாயக்க கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்