உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம்

🕔 November 9, 2017

பெற்றோல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற நபரொருவருக்கு, இறுதி நேரத்தில் பெற்றோல் கிடைக்காமையினால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக மரணம் சம்பவpத்த சோக நிகழ்வு, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலி மாவட்டம் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 53 வயதுடைய ஜயந்த பிரேமலால் ஆவார். இவர் அப்பகுதியிலுள்ள மயானமொன்றில் காவற்காரராக கடமையாற்றி வந்தவராவார்.

உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பெற்றோல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றனர். அதில் குறித்த நபரும் நின்றிருந்தார்.

இதன்போது வரிசையில் நின்ற ஒவ்வொருவருக்கும் பெற்றோல் வழங்கி வந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள், ஒரு கட்டத்தில் பெற்றோல் முடிந்து விட்டது எனக் கூறியுள்ளனர்.

இதனால், அங்கு நீண்ட நேரமாகக் காத்து நின்றவர்கள் – ஏமாற்றமடைந்த நிலையில் அங்கிருந்து சென்றுள்ளனர்.

ஆயினும் மேற்படி நபர், எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியர்களை கடுமையான கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். இப்படி அவர் வாய்ச் சண்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் சரிந்து நிலத்தில் வீழ்ந்து விட்டதாத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த நபரை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாரடைப்புக் காரணமாகவே இவர் மரணமடைந்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்