கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா

🕔 November 1, 2017
– அஷ்ரப் ஏ. சமத் –

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை வழங்குவதென்றால், அங்குள்ள அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவொன்றுக்கு வர வேண்டும் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையை 04 உள்ளுராட்சி சபைகளாகப் பிரிப்பதென்றால், அடுத்த நான்கு ஆட்டுகளுக்குப் பின்னர் வரும் தேர்தலொன்றின் போதே, அது சாத்தியமாகும் எனவும் அவர் கூறினார்.

உள்ளுராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைப்பினை வழங்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் பைசர் முஸ்தபா கைச்சாத்திடும் நிகழ்வு, இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையினைப் பிரகடனப்படுத்துமாறு கடந்த 03 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடந்து வருகின்றமையினைச் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமத், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை வழங்கப்படுமா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருதுக்கு தனியானதொரு உள்ளுராட்சி சபை கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அது பற்றி நான் நன்கு அறிவேன்.  சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையினை வழங்குவதாக – பொதுத் தேர்தல் காலத்தில் பிரதமரும் சொல்லியிருந்தாா்.

கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை பிரித்து, அதனை அனுமதிப்பதற்குரிய  நடவடிக்கைகளை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு  மேற்கொண்டிருந்தேன். ஆனால், கல்முனை  மாநகர சபையை 04 உள்ளுராட்சி சபைகளாக பிரிக்குமாறு கோரி,  இன்னொரு  பிரிவினா் அரசியல் அழுத்தங்களை கொடுத்தாா்கள்.

ஆகவே தற்பொழுது இதனை என்னால் செய்ய முடியாது.   ஏற்கனவே நுவரெலியாவுக்கு 04 சபைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. பொலநறுவை உள்ளுராட்சி சபையை மாநகர சபையாக  தரமுயா்த்தவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த  சபைகளுக்கும் இம்முறை  தோ்தல் நடைபெறும்.

இந்த நிலையில் கல்முனை மாநகர சபைக்கே இம்முறை உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறும்.

கல்முனை மாநகரசபை 04 சபையாகவோ அல்லது 02 சபையாகவே பிரிப்பது  பற்றி அங்குள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும். அப்படி வந்தால் அடுத்த 04 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் தோ்தலின்போது அதனை பிரிக்க முடியும்.

தற்பொழுது  சாய்ந்தமருதுக்கு தனியான சபையை வழங்க, அங்குள்ள அரசியல்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.

Comments