மு.கா. அடக்கி வாசிப்பதை, அதன் பலவீனமாக நினைத்து விடக் கூடாது என்கிறார் ஹசனலி

🕔 August 7, 2015

Hasan Ali - 0087
– முன்ஸிப் –

மு
ஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகள் மற்றும் பிரகடனங்கள் அனைத்தினையும் மிகவும் வெளிப்படையாக, தேர்தல் விஞ்ஞாபனமொன்றில் கூற முடியாதுள்ளதாகவும், அவ்வாறு செய்யும் போது, அதை பேரினவாதிகள் தூக்கிப் பிடித்து, பெரும் பிரச்சினையாக மாற்றி விடும் அபாயம் உள்ளது எனவும் மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.

மேலும், ஐ.தே.முன்னணியானது சிறுபான்மையினர் தொடர்பாக பேசுகின்ற விடயங்களை, பெருந்தேசிய கடும்போக்காளர்கள் உன்னிப்பாகக் கவனித்து, அவற்றினை ஊதிப் பெருப்பித்து, படுமோசமாக பிரசாரம் செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

‘தற்போதைய நிலையில், எல்லா விடயங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் திறந்து பேச முடியாதுள்ளது. அதனால், இந்தத் தேர்தலில் சில விடயங்களை நாம் அடக்கி வாசிக்கின்றோம். அதை எமது பலவீனமாக நினைத்து விடக்கூடாது.

இந்த நாட்டில் தமிழ் தேசியம் ஒன்று உள்ளதைப் போல, முஸ்லிம் தேசியமும் இருக்கின்ற உண்மையினையும், இரண்டு சமூகங்களும் ஒரே மொழியினைப் பேசுகின்றோம் என்பதற்காக, ஒரே தேசியமாக இயங்குகின்ற வாய்ப்புகள் இல்லை என்கிற கோட்பாட்டினையும், மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் முன்வைத்தார்.

அந்தக் காலங்களில் சுமார் 16 தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்தப் பிரதேசத்தில் போராடிக் கொண்டிருந்தன. அந்த ஆயுதக் குழுக்களுடன் இணைந்து, நிறைய முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் எடுத்துப் போராடி வந்தனர். தாங்கள் எதற்காக ஆயுதம் தூக்கிப் போராடுகிறோம் என்கிற உண்மை தெரியாமல், பிழையான வழியில் அவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து – தலைவர் அஷ்ரப் மிகவும் மனம் வருந்தினார்கள்.

அவ்வாறு, ஆயுதம் தூக்கிய முஸ்லிம் இளைஞர்களை, அந்தக் கலாசாரத்திலிருந்து மீட்டெடுத்து, அவர்களுக்கு ஓர் அரசியல் தலைமைத்துவத்தினை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் மு.காங்கிரசினை ஆரம்பித்தோம்.

இன்று இந்த நாட்டிலுள்ள அரசியல் மிகவும் மோசமான பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. முழு அரசியலும் வர்த்தக மயமாக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்