முஸ்லிம் தனிஅலகின் ஆழ அகலங்கள்

🕔 October 16, 2017

 

– ஏ.எல். நிப்றாஸ் –

மிழ் சினிமாவில் கவுண்டமணிசெந்தில் கொமடிகளில்வாழைப்பழக் கதைமிகவும் பிரபலமானது. கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு தரப்பட வேண்டிய இரு வாழைப்பழங்களுக்கு பதிலாக ஒரு பழத்தை மட்டும் காண்பித்துவிட்டு, ‘இதுதான் மற்றைய பழம்என்று வாதிடுகின்ற இந்த கொமடிக் காட்சி போலவே, நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தோரணையில் ஏதாவது ஒரு தீர்வைக் காட்டிவிட்டு, நீங்கள் கேட்டது இதுதான் என்று  காண்பிக்கும் முயற்சிகள் மேற்;கொள்ளப்பட்டு விடுமோ என்ற நியாயமான சந்தேகம் இப்போது மேலெழுந்திருக்கின்றது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற ஒரு காலசூழலில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றியும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் பேசப்படுகின்றது. அந்த வகையில், வடக்கையும் கிழக்கையும் மீள இணைப்பதில் கிழக்கில் உள்ள கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம்களுக்கும் உடன்பாடு இல்லை. அதனை அவர்கள் வெளிப்படையாகவே எதிர்க்கவும் செய்கின்றனர்.

முஸ்லிம்கள் இணைப்பே வேண்டாமென சொல்கின்ற சமகாலத்தில் அவர்களுக்கு தனியான ஒரு அதிகார அலகு வழங்குவது பற்றிய கதையாடல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, முஸ்லிம்கள் எவ்வாறான ஒரு தீர்வை அவாவி நிற்கின்றார்கள் என்ற விடயத்துடன், இப்போது பேசப்படுகின்ற தனியலகை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இந்த அலகின் இலட்சணங்கள், ஆழஅகலங்கள், பரிமாணங்கள் குறித்து சரியாக ஆராய வேண்டியது காலத்தின் தேவையுமாகும்.  

தீர்வு வழங்கும் முயற்சி

அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றுக்கான அடிப்படையை ஏற்படுத்துவதில் அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகின்றது. அந்த அடிப்படையில் உத்தேச அரசியலமைப்புக்கான ஒரு தெரிவுக்குரிய யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளவடக்கு, கிழக்கை இணைந்த மாகாணமாக அரசியலமைப்பு அங்கீகரிக்கும்என்ற விடயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக வலியுறுத்தி வருகின்றது. இவ்விணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று அக்கட்சி கோரியுள்ளது. தமிழர்களுக்கு சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளில் இருந்து ஒரு அங்குலமேனும் இறங்கி வர முடியாது என்று அடித்துக் கூறியுள்ளது. அவ்வாறான உள்ளடக்கங்களைக் கொண்டதாக இந்த அரசியலமைப்பு இல்லாதபட்சத்தில் அதனை நிறைவேற்றுவதற்கான மூன்றிலிரண்டு பலமுள்ள ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்குவது குறித்து எச்சரிக்கும் பாணியிலான அறிக்கைகளும் விடப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்க வேண்டுமென்றே முஸ்லிம்கள் விரும்புகின்றனர். தமிழர் அரசியலில் போராளிகளாகவும், விடுதலைப் போராட்டக் களத்திலும் ஆயுதப் போராளிகளாகவும் தங்களது பங்களிப்பையும் வழங்கிய சமூகம் என்ற அடிப்படையில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்க வேண்டிய எந்த முகாந்திரங்களுக்கும் முஸ்லிம்களுக்கு இல்லை. ஆனால், வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி முஸ்லிம்கள் நியாயபூர்வமாக பெரிதும் அச்சப்படுகின்றனர்.

ஏனென்றால் இவ்விரு மாகாணங்களும் இணைந்திருந்த 18 வருடங்களிலும் அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் கசப்பானவையாகவும் திகிலூட்டுபவையாகவும் இன்னும் மனதில் இருக்கின்றன.  அந்த அனுபவங்களுக்குள் மீண்டும் சென்று தங்களை ஒரு பரிசோதனைக் குழாயாக மாற்றிக் கொள்ள வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு விருப்பமில்லை எனவேதான் அவர்கள் இவ்விணைப்பை எதிர்க்கின்றார்கள்.

இவ்விரு மாகாணங்களை ஏன் இணைக்க வேண்டும் என்றும்; தமிழர்களுக்கு கிடைக்கின்ற அனுகூலத்தின் அளவுக்கு முஸ்லிம்களுக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதற்கும், இணைக்கக் கோரும் தரப்பினர் திருப்தியான விளக்கங்களை கூறவில்லை. இவ்வாறு இணைந்தால் தமிழ்முஸ்லிம் மக்கள் தங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தலாம். அதனால் இவ்விரு இனங்களுக்கும் இடையிலான உறவு ஒரு அங்குலம் முன்னோக்கி நகரலாம் என்றாலும் இவ்விணைப்பே இனவுறவை மேம்படுத்தும் என்று கூற முடியாது. ஏனெனில், பக்கத்து வீட்டில் இருக்கும் அப்துல்லாவும் ஐயாத்துரையும் நல்லுறவை வளர்க்காத வரையில் வடக்குகிழக்கை இணைப்பதால் உறவு வளரும் என்றோ, இணைக்காவிட்டால் அது நடக்காது என்றோ கூற இயலாது.

இந்தப் பின்னணியோடு முஸ்லிம் தரப்பில் இருந்து ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்ட பிற்பாடு தன்னை சுதாகரித்துக் கொண்ட பிரதான முஸ்லிம் கட்சியின் தலைவர்முஸ்லிம்களுக்கு தனி அதிகார அலகு என்ற நிபந்தனையை பூர்த்தி செய்துதர வேண்டும்என்ற தொனியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்;. பதிலுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு தனியான அலகு ஒன்றை வழங்குவதற்கான பச்சை சமிக்கையை காண்பித்துள்ளது.

இனப் பிரச்சினைத் தீர்வு அல்லது அதிகாரப் பகிர்வு பற்றி பேசப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் தனியான ஒரு மாகாணத்தை அல்லது அலகை கோரி வந்திருக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் முஸ்லிம்கள் கோருவதற்கு முன்னரே தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு தனியான ஒரு ஆளுகைப் பிரதேசம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தி வந்திருக்கின்றனர் என்பதே வரலாறாகும். ஆனால் அரசாங்கமோ, தமிழ் அரசியல்வாதிகளோ அந்த அலகின் எல்லைகள் என்ன? அதன் ஆட்புலம், அதிகாரங்கள் என்ன? என்பது பற்றி; ஒருபோதும் வரையறுத்துக் கூறவில்லை.

சுமந்திரனின் கருத்து

ஆனால், தனிஅலகு என்று வருகின்ற போது, முஸ்லிம்கள் உண்மையாக எதிர்பார்க்கின்ற பிரதேசங்களை உள்ளடக்காமல் தற்போதிருக்கின்ற அம்பாறை மாவட்டத்தின் மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு அலகே உருவாக்கப்படும் என்று பலமுறை கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். அதையே மிக அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தொலைக்காட்சி தலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு சபையின் வழிநடாத்தும் குழு உறுப்பினருமான எம்..சுமந்திரன், வழிநடாத்தல் குழுவில் முஸ்லிம்கள் சார்பில் முறையாக கோரிக்கைகள்  முன்வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி முதன்முதலாக முஸ்லிம் அலகின் எல்லைகள் பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை (சிங்கள) தொகுதி நீங்கலாக ஏனைய மூன்று முஸ்லிம் தொகுதிகளையும்  உள்ளடக்கியதாக இந்த முஸ்லிம் அலகு அமையப் பெறலாம் என்ற அடிப்படையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு ஒரு அலகை தருவதற்கு .தே.கூட்டமைப்பு முன்வந்தமை நன்றிக்குரியது என்றாலும், முஸ்லிம்கள் 50 வருடங்களுக்கும் மேலாக வேண்டிநிற்கின்ற அலகு, சுமந்திரன் எம்.பி. கூறியதுதானா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. மு.கா.வின் ஸ்தாபகத் தலைவரும் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் தந்தையுமான எம்.எச்.எம்.அஷ்ரபின் நிலைப்பாட்டில் அல்லது தனியலகு கோட்பாட்டின் தந்தை எம்;..எம்.மொஹிதீனின் நிலைப்பாட்டில் அல்லது அதைவிட சிறந்த ஒரு நிலைப்பாட்டில் நின்று இதனை ஒப்பிட்டு நோக்க வேண்டியுள்ளது.

1956ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 4ஆவது மாநாட்டில் இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி அரசும், முஸ்லிம்களுக்கு ஒரு சுயாட்சி அரசும் அமையும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அது திருமலை தீர்மானமாக பகிரங்கப்படுத்தப்பட்டது.  1961இல் நடைபெற்ற 9ஆவது மாநாட்டில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான சம அந்தஸ்துள்ள ஆட்சியை தந்தை செல்வநாயகம் மீள உறுதிப்படுத்தினார். 1977ஆம் ஆண்டு முஸ்லிம் ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியதையடுத்து, அக்கட்சி அவ்வாண்டைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சி முறை நிறுவப்படுவது பற்றி அக்கட்சி பிரஸ்தாபித்திருந்தது.

இதுதான் தமிழர்கள் முஸ்லிம்களுக்கு தருவதாகச் சொன்ன, முஸ்லிம்கள் வேண்டிநிற்கின்ற முஸ்லிம் அதிகார அலகின் இலட்சணமாகும். தென்கிழக்கு பிரதேசம் அதாவது அம்பாறை மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய ஒரு குறுகலான ஆட்சிப்பரப்பை முஸ்லிம்கள் கோரியதும் இல்லை, அது தேவையானதும் இல்லை. கரையோர மாவட்டத்தின் எல்லைகளைக் கொண்ட ஒரு ஆட்சியதிகார பிரதேசத்தை வழங்கிவிட்டு இதுதான் அலகு என்று யாரும் நிரூபிக்க முனையவும் கூடாது.

அஷ்ரஃப் கேட்டது

சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் தீர்வுத்திட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்குவது பற்றி கதையாடல்கள் இடம்பெறத் தொடங்கின. இதுதொடர்பாக 1998 ஜூலை மாதம் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு மு.கா. தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் வழங்கிய நேர்காணலில் இது பற்றி காட்டமான, தெளிவான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

மு.கா.தென்கிழக்கு அலகை ஒருபோதும் கோரிக்கையாக முன்வைக்கவில்லை. அரசாங்கம் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகும் வரை தென்கிழக்கு அலகு எனும் திசைவழிப் பெயரை மு.கா.வின் வின் அறிக்கைகளிலோ ஆவணங்களிலோ கண்டிருக்கவும் முடியாது என்று அஷ்ரப் சொன்னார். அப்படியென்றால் முஸ்லிம் காங்கிரஸோ முஸ்லிம் மக்களோ ஒரு அதிகார அலகை கோரவில்லையா என்ற கேள்வி எழுவது யதார்த்தமானதே.

இதற்கான பதிலையும் அந்த நேர்காணலில் அஷ்ரப் சொல்லியிருந்தார். அதாவது, ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1995 வரை நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் பற்றி பேசிவந்தது. இப்போது தோற்றம்பெற்றுள்ள புதிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு நிலத் தொடர்புள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிராந்திய அலகானது தென்கிழக்கு என்றும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியங்களை ஒன்றிணைத்து அகன்ற தென்கிழக்கு என்றும் ஈரிணைக் கோட்பாடாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. எனவே, இந்த தனித்தனிக் கோட்பாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

அஷ்ரஃப் கூட நிலைப்பாடுகளை காலத்திற்கேற்றால் போல் மாற்றியவர்தான் என்றாலும், மேற்குறிப்பிட்ட விடயத்தின் சாரம்சம் என்னவென்றால், சுருங்கிய அல்லது குறுகலான ஒரு ஆட்சிப் பரப்பை முஸ்லிம் காங்கிரஸ் கோரவில்லை. முஸ்லிம்களுக்கு அவ்வாறான ஒன்று தேவையுமில்லை என்பதாகும். இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்தையே முஸ்லிம்கள் ஆரம்பத்தில் கோரினர். பின்னர் நிலத்தொடர்புள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிராந்திய அலகு என்ற ஒரு நிலைப்பாடு வந்தது. அதேநேரம், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளை சேர்த்து அகன்ற தென்கிழக்கு அலகு என்று பல தெரிவுகளை மு.கா. முன்வைத்தது.

உண்மையில்,  நிலத்தொடர்புள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிராந்திய அலகே தென்கிழக்கு என்ற பதம் கொண்டு அழைக்கப்பட்டது அல்லது அன்றைய ஆட்சிச்சூழல் தென்கிழக்கு அலகாக அதனை அடையாளப்படுத்தியது என்பதாகும். தவிர அம்பாறையில் உள்ள 3 தேர்தல் தொகுதிகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு சிறு ஆளுகைப் பரப்பல்ல. இவ்வாறான தென்கிழக்கு அலகையே மு.கா. கோரவில்லை என்று அஷ்ரப் சொல்லியிருப்பார் என்று கருதலாம். உண்மையில் அவர் கோரியது தென்கிழக்கை பிரதான கேந்திர மையமாகக் கொண்ட நிலப்பரப்பே என்பதால் ஆட்சியாளர்கள் அந்தப் பெயரை அதற்கு வைத்து, தென்கிழக்கிற்குள் வரும் ஊர்களை மட்டுமே வழங்குகின்ற விதத்திலான ஒரு நகர்வை மேற்கொண்டிருக்கலாம்.

கடைசி நிலைப்பாடு

வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படாவே முடியாத ஒரு சூழலில், விடுதலைப் புலிகளின் கைகள் மேலோங்கியிருந்த ஒரு பின்னணியில் யதார்த்தத்தின்படி அவர் அப்போது சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய சித்தமாயிருந்தாலும் அதன் பின்னர் அவர் ஒரு காத்திரமான நிலைப்பாட்டை வெளியிட்டார். அதாவது தென்கிழக்கு அலகு என்று ஆட்சியாளர்கள் கருதும் தென்கிழக்கின் 3 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு (சிறிய) அலகு உருவாக்கப்பட்டாலும், அந்த முஸ்லிம் அலகுடன் இணைந்திருப்பதற்கான விருப்பத்தை அறிந்து கொள்ளும் முகமாக மட்டு, திருமலை மாவட்ட மக்களிடமும், அம்பாறைத் தொகுதி சிங்களவர்களிடமும் சர்வஜன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சொன்னார். (அதாவது அலகின் எல்லைகள் விசாலமாக இருக்க வேண்டுமென விரும்பினார்).

சந்திரிக்கா அம்மையாருக்கு மு.கா. கையளித்திருந்த கோரிக்கையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அமைந்துள்ள கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டும் மட்டு, திருமலை, மன்னார் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களை உள்ளடக்கியதாகவும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு உருவாக வேண்டும் என்பதை எழுத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடைசியாக முத்தாய்ப்பாக 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் 3 மணித்தியாலம் உரையாற்றிய அஷ்ரஃப் முஸ்லிம்களிற்கு என்ன வேண்டும் என்பதை வலியுறுத்தினார் அதன்பிறகு, வடமகாண முஸ்லிம்களை முஸ்லிம் அலகுக்குள் உள்வாங்குவது சிக்கலானது என உணர்ந்து கொண்ட அவர் மரணிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் முஸ்லிம்களின் இற்றைப்படுத்தப்பட்ட கோரிக்கை குறித்து சொல்லியிருந்தார். அதில் அவர், ‘அம்பாறை அதாவது தென்கிழக்கின் 3 தொகுதிகளையும் மட்டு, திருமலை மாவட்டங்களின் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களை உள்ளடக்கிய அகன்ற முஸ்லிம் அதிகார அலகு உருவாக வேண்டும்என்பதை அறுதியும் இறுதியுமாக சொல்லியிருந்தார்.

இதுதான் முஸ்லிம்களின் அபிலாஷை குறித்த நிலைமாறாத நிலைப்பாடாகும். அதாவது, தென்கிழக்கு அலகு, முஸ்லிம் அலகு, முஸ்லிம் மாகாணம் என எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அது கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை தொகுதிகளுடன் திருமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களையும் உள்ளடக்கிய நிலத்தொடர்பற்ற, அகன்ற முஸ்லிம் அதிகார அலகு வழங்கப்பட வேண்டும். அதைவிடுத்து, .தே.கூட்டமைப்பு சொல்வது போன்று மூன்று தொகுதிகளை மட்டும் கொண்ட ஒரு சிறிய, ஒடுங்கிய அலகு முஸ்லிம்களுக்கு அவசியமில்லை.

ஆனால், அஷ்ரப் சொன்னதற்காக அல்லாமல் அதன் தேவை, நடைமுறைச் சாத்தியம், எதிர்கால நலன் என்பவற்றைக் கருத்திற்கொண்டு அதனை கோர வேண்டும். அதன் எல்லை, பரிமாணம், ஆழஅகலங்கள் குறித்து முறையாக கோரிக்கை விடுக்க வேண்டும். அதேபோன்று, முன்னாள் எம்.பி. சுஹைர் போன்றோர் கூறியுள்ளதைப் போல வடக்கு, கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களில் எதிர்காலத்தில் இது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இணைக்கக் கூடாது

கிழக்கில் முஸ்லிம்களின் சனத்தொகை 40 வீதத்திற்கும் அதிகமாகும். இவ்வாறிருக்கையில், (தென்கிழக்கு அலகு எனும்) குறுகிய ஒரு நிலப்பரப்பிற்குள் முஸ்லிம்கள் தங்களது ஆட்சியதிகாரத்தின் ஆட்புலத்தை குறுக்கிக் கொள்ளக் கூடாது. கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களை உள்ளடக்கியதாகவும் தென்கிழக்கை மையமாகக் கொண்டதாகவும் அமைந்த ஒரு அகன்ற, அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் பிராந்திய அலகாக முஸ்லிம் அலகு அமைய வேண்டும். இவ்வாறான ஒன்றை வழங்க சிங்கள தேசியமோ, தமிழ் தேசியமோ பெரிதும் விரும்பாது என்றபடியாலேயே, அப்படியென்றால் இப்போதிருக்கின்ற கிழக்காவது தனியாக இருக்கட்டும் என்ற அடிப்படையிலேயே வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம்கள் கேட்பதற்கு முன்னமே சுயாட்சி தருவதாக 60 வருடங்களுக்கு முன்னர் சொன்னவர்கள் தமிழ் அரசியல்வாதிகள்;. அந்த வகையில் ஒருவேளை, அவ்வாறான ஒரு அதிகார அலகை முஸ்லிம்களுக்கு இனப் பிரச்சினைத் தீர்வாக வழங்கப்படும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதேபோன்று அரசாங்கமும் உறுதிப்படுத்துமாக இருந்தால் மாத்திரமே வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி பேச வேண்டும். இல்லாவிட்டால் இணைப்புக்கு ஆதரவளிக்க வேண்டிய கடப்பாடு முஸ்;லிம்களுக்கு கிடையாது. ஏனென்றால் அதனால் ஒரு அங்குலம் கூட முஸ்லிம்களின் தனியடையாள அரசியல் முன்னோக்கி நகராது என்பதுடன் அதுதான் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பானதாக அமையும். அதைவிட்டுவிட்டு, நீங்கள் கேட்ட அலகு இதுதான் என்று யாராவது எதையாவது தந்தால் வாயை மூடிக்கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதே முஸ்லிம் சிவில் சமூகத்தின் நிலைப்பாடாகும்.

முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷையுடன் தொடர்புபட்ட இன்றைய கதையில் யார் யார் நிஜக் கதாபாத்திரங்கள், யார் யார் நடிகர்கள் என்பது மர்மமானது. இதில் கொமடி நடிகர்கள் இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களின் உணர்வும் அபிலாஷையும் கொமடியல்ல.

நன்றி: வீரகேசரி (15.10.2017)

புதிது பேஸ்புக் பக்கம்