நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை
🕔 August 5, 2015




– அஸ்ரப் ஏ. சமத் –
இலங்கையை தெற்காசியாவிலேயே சிறந்ததொரு நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக ஐ.தே.கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதை நிறைவேற்றும் பொருட்டு, இம்முறை 130 ஆசனங்களைப் பெறுவதற்கான சந்தர்தப்பத்தினை ஐ.தே.முன்னணிக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று செவ்வாய்கிழமை, தெஹிவளை சந்தியில் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சா் சுனித்திரா ரணசிங்க மற்றும் ரத்மலானை ஜ.தே.கட்சி வேட்பாளரும், ஊடகவியலாளருமான உபுல் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐ.தே.க. தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
“இந்த நாட்டை சக்திமிக்க பொருளாதார வளம் கொண்டதாகக் கொண்டு செல்வதற்கும், இந்தியாவின் சென்னை மாநகரம் போன்று மாற்றியமைத்து, மேல்மாகணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளை மாநகரங்களாக்கி, இலங்கையை தெற்காசியாவிலேயே சிறந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்கு, எதிர்வரும் நாடாளுமன்றத்தில் 130க்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறுவதற்கு, எமக்கு சா்ந்தர்ப்பமொன்றை, மக்களாகிய நீங்கள் தர வேண்டும்.
அடுத்த 08 மாதங்களுக்குள் இந்த நாட்டை திறம்பட கொண்டு செல்வேன். ஏற்கனவே ஹம்பாந்தோட்டையில் இயந்திரப் படகுகள் உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. அதே போன்று, நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டைப் பிரதேசங்களில், வெளிநாட்டு மூலதனத்துடன் தொழில் பேட்டைகளை நிறுவவுள்ளேன்.
கணிணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலங்கையில் அமைக்கப்படும். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு, 05 வருடங்களுக்குள் தொழில் வழங்கும் திட்டமொன்று உள்ளது.
மேலும், 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து – வீடுகளற்ற மக்களுக்கு வழங்கவுள்ளோம்.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, முழு இலங்கையிலுமுள்ள வீடுகளில், இலவசமாக இணையத்தினை உபயோகிப்பதற்கான யுகம் கொண்டுவரப்படவுள்ளது.
இம்முறை யானைச் சின்னத்தில் ஜ.தே.கட்சி மட்டும் வாக்கு கேட்கவில்லை. ஜ.தே.முன்னணி என்ற கூட்டணியில் – பாட்டலி சம்பிக்க ரணவக்க, எம்.டி.எஸ் குணவா்த்தன, அர்ஜூன ரணதுங்க, ராஜித சேனாரத்தின, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், திகாம்பரம், மனோகனேசன் மற்றும் 167 சமூக அமைப்புக்கள் இணைந்து, யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்றார்.




Comments



