தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார்
– ரெ. கிறிஷ்ணகாந் –
தாய்வானின் ஃபார் ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி அமெரிக்காவிலுள்ள அந்த வங்கியின் கணக்குகளிலுள்ள பணத்தை தமது கணக்குகளுக்கு பரிமாற்றிப் பணமோசடி செய்த சம்பவத்தின் பிரதான சுத்திரதாரியென கருதப்படும் மற்றொரு சந்தேக நபரான லிட்ரோ கேஸ் (அரச) நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இச்சம்பவம் தொடர்பில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஜாலிய நம்முனியின் மகனான ஜனக்க சமிந்த நம்முனி கடந்த 07 திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஷலீல முனசிங்கவைத் தேடி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
தன்னைப் பொலிஸார் தேடுவதனை அறிந்து கொண்ட ஷலீல முனசிங்க, நுகேகொடை, நாலந்தாராமயவில் மறைந்திருந்த நிலையில், பொலிஸாருக்கு தனது இருப்பிடம் தொடர்பில் தகவல் தெரிய வந்ததை அறிந்து கொண்டதையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவின் மூலம் சரணடைந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள ஷலீல முனசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ஆவார். இக்கட்சியின் சின்னத்திலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவராக ஷலீல முனசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
தாய்வானில் அமைந்துள்ள பார் ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கியின் கணக்குகளுக்குள் ஊடுருவி சுமார் 60 மில்லியன் டொலர்களை (சுமார் 920 கோடி ரூபா) இந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஹெக்கர் குழுவினர் மோசடி செய்துள்ளனர்.
இக்கொள்ளையில் ஈடுபட்ட குறித்த குழுவைச் சேர்ந்த இலங்கை உறுப்பினர்கள் மூவரது கணக்குகளில் சுமார் 1. 3 மில்லியன் டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கையிலுள்ள 03 கணக்குகளுக்கு வந்த 1.3 மில்லியன் டொலர்களை தேடி வருகிறோம் என ஏ.எவ்.பியிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி பாரிய பணமோசடி தொடர்பில் ஃபார் ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கியின் ஊடாக இலங்கை வங்கிக் கிளைக்கு அறிவிக்கப்பட்ட அதேவேளை, தாய்வானிலுள்ள அவ்வங்கியின் மூலமாகவும் இது தொடர்பில் அவ்வங்கிக்கு மின்னஞ்சல் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஃபார் ஈஸ்டர்ன் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் தனக்குரிய பங்கு தனது கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, முதல் சந்தேக நபரான நம்முனி, இரு முறைகள் கொழும்பிலுள்ள இலங்கை வங்கிக் கிளையொன்றுக்கு வந்து விசாரித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரின் நடவடிக்கை தொடர்பில் வங்கி முகாமையாளர் சந்தேகம் கொண்டு அப்பணம் எங்கிருந்து வைப்பிலிடப்படுகிறது எனக் கேட்டபோது, அவை வர்த்தக நடவடிக்கைகளுக்காக கிடைத்த நிதி என அவர் பதிலளித்திருந்தார்.
அமெரிக்க வங்கியிலுள்ள நிதியை தாய்வானிலுள்ள வங்கிக்கு பரிமாற்றம் செய்து அவற்றில் தமக்குரிய பங்கினை ஸ்லிப்ஸ் பரிமாற்ற முறையில் Sri Lanka Interbank Payment System (SLIPS) இலங்கையிலுள்ள இலங்கை வங்கிக்கிளைக்கு பரிமாற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலுள்ள ஹெக்கர்ஸ் (இணைய ஊடுருவிகள்) சிலருடன் ஒன்றிணைந்து ஷலீல முனசிங்க மற்றும் ஜனக்க சமிந்த நம்முனி ஆகியோர் இந்த மோசடியை திட்டமிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய இம்மோசடியில் பெறப்பட்ட பணத்தின் நூற்றுக்கு 50 சதவீதமானவை ஹெக்கர்களுக்கும், நம்முனிக்கு 30 வீதமும், ஷலீலவுக்கு 20 வீதமும் பெற்றுக்கொள்ள பேரம் பேசப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடியுடன் தொடர்புடைய இந்திய ஹெக்கர்களும் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த நிலையில், கொழும்பிலுள்ள முதற்தர ஹோட்டலொன்றில் வைத்து அப்பணம் பகிரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஷலீல நேற்று முன்தினம் இரவு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், ஷலீல முணசிங்க நேற்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப் பட்டதை யடுத்து இன்றுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, இன்று அவரை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, தொடர்ந்தும் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.