கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 October 5, 2017
– பிறவ்ஸ் முகம்மட் –

ருபதாவது திருத்தத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவும் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்ற காரணத்தினால் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை கைவிட்டுவிட்டது. இது தெரியாதவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் 20ஆவது திருத்தத்துக்கு கைதூக்கிவிட்டதாக பேசிக்கொண்டு திரிகின்றனர் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ‘தேர்தல் சீர்திருத்தங்களும் இடைக்கால அறிக்கைகளும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது;

“எது 20, எது 19, எது 18 என்று தெரியாதவர்கள் அரசியல் கட்சித் தலைவராக இருக்கின்றனர். ஆனால், இதில் உங்களுக்கு போதியளவு தெளிவு இருக்கவேண்டும். அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற சிலர், இவற்றைப்பற்றி தவறான புரிதல்களை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர்.

அமைச்சர் மனோ கணேசன் கூறியதுபோல, தெற்கிலுள்ள சிங்கள பௌத்த மக்கள் மத்தியில், இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு ஆபத்து இருப்பதாக பீதியை உருவாக்குவதற்கு எத்தனிக்கின்றனர். அதுபோல், அதே குழுவோடு சேர்ந்து வடக்கு கிழக்கிலே இருக்கின்ற சில முஸ்லிம் தலைமைகள் வடக்கு கிழக்கு இணைக்கப்படப்போகிறது என்று இன்னுமொரு பீதியை உருவாக்க எத்தனிக்கின்றனர்.

ஜாடிக்கு மூடியாக இருக்கின்ற இரண்டு தரப்புகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

இந்த நாட்டிலே சிறுபான்மை மக்களுக்கான தீர்வு வருமா, வாராதா என்பது ஒருபுறமிருக்க, தங்களுடைய சொந்த அரசியல் அபிலாஷைகளுக்காக வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக சில அமைச்சர்கள் பேசித் திரிகின்றனர். வடக்கில் இருக்கின்றவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பழி சொல்லியே தனது அரசியலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இதன் பின்னாலுள்ளது. இதைவைத்து சிலர் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசி நாடகம் நடத்துகின்றனர்.

கிழக்கில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் ஒருவருடைய செயற்பாடுகள் அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் ஒரே நோக்கம் கொண்டவைதான். தனக்கு சிங்கள மக்களின் வாக்குகள் இல்லாமல் நாடாளுமன்றம் போகமுடியாது என்பதற்காக கிழக்கை பிரிக்கவேண்டும் என்கிறார். அப்படியானால், வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்று பகிரங்கமாக பேசவேண்டிய தேவை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்குத்தான் கூடுதலாக இருக்கவேண்டும்.

ஏனென்றால், நான் சிங்கள மக்கள் வாழ்க்கின்ற பிரதேசங்களிலிருந்து நாடாளுமன்றம் செல்கின்ற ஒருவர். நான் இதை இப்போது தூக்கிப்பிடித்தேன் என்றால்  எனக்குத்தான் மிகவும் பிரயோசனமாக இருக்கும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுடைய மறைந்த தலைவருக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கின்றது.

வடக்கு கிழக்கு  தற்காலிகமாக இணைக்கப்பட்டபோது, அதை நிரந்தரமாக இணைக்க முஸ்லிம்களின் ஆதரவு தேவை என்ற நிலைப்பாடு இருந்தபோது, ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என்பதிலே முஸ்லிம் காங்கிரஸ் கவனமாக இருந்தது. ஏன் என்பதற்கான விளக்கம் சொல்லவேண்டிய அவசியமில்லை. இதனால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் பற்றி மிக ஆழமாக சிந்தித்ததன் விளைவாகத்தான் வடக்கு கிழக்கு இணைப்பு நிரந்தரமாக வேண்டுமென்றால் முஸ்லிம்களுக்கென்று அரசியல் அலகு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம்.

இனியும் வடக்கு கிழக்கு இணைகின்ற சாத்தியங்கள் பற்றி நண்பரும் அமைச்சருமான மனோ கணேசன் பேசிய பாணியில் நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்பவர்களாக முஸ்லிம் தலைமைகள் பார்க்கப்படவேண்டிய அவசியமில்லை என்ற கொள்கைகளில் இருக்கின்றோம். சும்மா இருக்கின்ற சங்கை ஊதிக்கெடுக்கின்ற அவசியமும் எங்களுக்கு கிடையாது.

எங்களுடைய அபிலாஷைகள் இணைப்பை தடுப்பதிலும், பிரிப்பை தடுப்பதிலும் மாத்திரம் இருக்கின்றது என நம்பிக் கொண்டிருப்பது என்னைப் பொறுத்தமட்டில் வங்குரோத்து அரசியலின் உச்சகட்டம். இதன்மூலம்தான் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்கு சேர்க்கவேண்டும் என்று நினைப்பதும் மடமைத்தனம். ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸின் வாக்காளர்கள் அரசியல் ரீதியாக மிகவும் கூர்மையான அறிவுள்ளவர்கள்.

இப்படியான கதை தொடர்ந்து பேசப்படுகின்றபோது, எங்களுக்கு ஒரு தனியலகு என்பது அவசியம் என்ற விடயத்தில், ஒரு நிர்வாக மாவட்டம் தேவை என்கின்ற தெளிவான பிரேரணையை நாங்கள் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் கூறினாலும் அது வேண்டுமென்று அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக நான் பாராளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தேன்.

அமைச்சர் மனோ கணேசன் கூறியதுபோல, பேரினவாதக் கட்சிகள் என்பது இந்த நாட்டின் சிதறிவாழும் தமிழ், முஸ்லிம் மக்களுடைய முதுகுகளில் ஏறித்தான் அவர்களுடைய இலக்குகளை அடையவேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது. இந்நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக 25 தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் போயிருக்கிறோம். உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்த சட்டத்துக்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றம் சென்று வாதாடினோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 70:30 என்ற உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டம் எப்போதோ நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அதை நான்கைந்து வருடங்கள் தாமதமாக்கச் செய்தோம். இப்படி பல சந்தர்ப்பங்களில் போராடிய ஒரு இயக்கமாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்