வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது: ஹக்கீம் தெரிவிப்பு
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வடக்குடன் கிழக்கை இணைக்கவிட மாட்டோமென கூறி சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கின்ற தரப்பினருக்கு தூபமிடுவதற்கு முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். அது தொடர்பில் கலந்துரையாட முஸ்லிம் சகோதர்களுக்கு அழைப்பு விடுகின்றோம். அதேவேளையில் இணைந்த வடக்கு கிழக்கிற்கு படித்த பக்குவமான முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக்குவதை எதிர்க்கப்போவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் ரா. சம்பந்தன் மன்னாரில் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர்களுள் ஒருவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் சுதந்திரக்கட்சி, மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாடு நம்பிக்கையான ஒளிக்கீற்று என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் குறித்த ஊடகம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
“வடக்கு கிழக்கு இணைப்பு என்பது நீண்டகாலமாக பேசப்படுகின்ற விடயமாகும். இது இரண்டு சமூகங்களின் அபிலாஷைகளுடன் தொடர்புடைய விடயமாகும். இந்த விடயத்தில் எமது கட்சி நீண்டகாலமாக ஒரு நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக எமது மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுகின்ற போது, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு தனியானதொரு அலகு அமையவேண்டும் என்று கொள்கையளவிலான முடிவொன்றை எடுத்திருந்தார்.
இந்த தீர்மானத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது வரையில் விலகவில்லை. இவ்விடயம் சம்பந்தமாக நாம் தமிழ் சகோதர்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். நடத்திக்கொண்டும் இருக்கின்றோம். மேலும் நிபந்தனைகளுடனான நீண்ட கலந்துரையாடல்களும் அவசியமாகின்றன.
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் ஒரு வகை மெத்தனப் போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதிலளித்து விட முடியாது. இதற்கு காரணங்கள் உள்ளன. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஒரு வருடத்துக்குள் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நீடிப்பதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது. சர்வ,ஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதன் ஊடாக இரண்டு சகோதர சமுகங்களுக்கு இடையில் விபரீதம் ஏற்படுத்த அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் முயன்றது. ஆனால் அத்தகைய நிலைமைகள் எல்லாம் தெய்வாதீனமாக கடந்து போயின.
தற்போதைய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுகின்ற போது முஸ்லிம்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் தனி அலகு அமையப்பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காக நீண்ட பேச்சுவார்த்தைகள், நிபந்தனையுடனான முன்னெடுப்புகள், விட்டுக் கொடுப்புகள் என பல விடயங்கள் இடம்பெறவேண்டியுள்ளன.
வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. அது ஆரோக்கியமானதல்ல. சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு இவ்வாறு ஒரே நிரையில் பதிலளிப்பது அவர்களின் நிகழ்ச்சிக்கு தூபமிடுவதாகவே அமையும். தமிழ் முஸ்லிம் மக்களிடையில் எந்தவிதமான நல்லுறவும் பேணப்படக் கூடாது என்ற போக்கையே இத்தகையோர் கொண்டுள்ளனர். இது பிழையான அணுகுமுறையாகும்.
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் ஊடகாவே அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரு மாகாணங்களும் அங்கீகாரம் வழங்கினாலும் அது சாத்தியமாகாது. இவ்வாறான சில காப்பீடுகளும் இருக்கும் நிலையிலே, இந்த விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்துது போல காட்டி, அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவசரப்பட்டு பேசுவது அரசியல் பிழைப்புவாத பேச்சுக்கள் மட்டுமேயாகும். ஒரே இரவில் அல்லது நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்துவிடுவதைப் போன்று பேசுகின்றனர். முஸ்லிங்களின் உடன்பாடின்றி இதனை செய்ய முடியாது. செய்யவும் மாட்டோம் என சம்பந்தனே கூறியிருக்கிறார். வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர், எமக்கு தீர்க்க வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அடுத்தபடியாகவே இவ்விடயம் தொடர்பில் ஆராய முடியும்” என்றார்.