கண்களை விற்று, சித்திரம் வாங்குதல்

🕔 October 3, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

நின்று நிதானித்து மூச்சு விடுவதற்குள், மூன்று திருத்தச் சட்டமூலங்களையும், அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினுடைய இடைக்கால அறிக்கையையும் அரசாங்கம் களமிறக்கிப் பார்த்திருக்கிறது. ஒரு குறுகிய காலத்துக்குள் இவை அத்தனையும் நாடாளுமன்றுக்கு வந்தமையினால், எதற்கு என்ன பெயர் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல், ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பி, படித்தவர்களே தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை, 20ஆவது திருத்தச் சட்டமூலம் என்று எழுதிக் கொண்டிருப்பவர்களை இப்போதும் காணக்கிடைக்கிறது. குழப்பம் இது மட்டுமல்ல; இதற்கு அப்பாலும் இருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் வகையிலான 20ஆவது திருத்தச் சட்டமூலம், மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஆகியவை களமிறக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையும் வெளிவந்துள்ளது.

மேற்படி சட்டமூலங்களில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலமும், மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலமும் நாடாளுமன்றில் நிறைவேறியிருக்கிறது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதோடு, சர்வஜன அபிப்பிராய வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியிருந்தமையால் 20ஐ அரசாங்கம் கிடப்பில் போட்டு விட்டது. இவை அனைத்துக்கும் பின்னர், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தற்போது வெளி வந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றுக்கு வந்தபோது, அதில் கணிசமான குறைபாடுகள் உள்ளன என்றும், அதனால் முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் முஸ்லிம் கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே கடுமையாகக் கோபப்பட்டு விட்டு, இறுதியில் அதை நிறைவேற்றுவதற்காக வாக்களித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

இதன்பிறகு, 20ஆவது திருத்தச் சட்டமூலம் வந்தது. இந்தச் சட்டமூலம் அரசாங்கத்தின் தந்திர முகத்தை அம்பலப்படுத்தியது. அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்காகவே, இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் கூறியிருந்தது. ஆனாலும், தற்போதைக்கு மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகவே இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கையிலெடுத்தது. இப்போதைக்கு தேர்தலொன்றை நடத்தி, அதில் வெற்றிபெறுவதற்கான சாதக நிலை, அரசாங்கத்துக்கு இல்லை என்றும், அதனால்தான் 20ஆவது திருத்தத்தின் மூலம், மாகாணசபைகளின் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

தற்போது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைப்பதுதான் அரசாங்கத்தின் உடனடித் தேவையாகவும் இருந்தது. ஆனால், தேர்தலொன்றை ஒத்தி வைப்பது நாட்டின் இறைமைக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான செயற்பாடு என்பதால்தான், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் வலியுறுத்தியிருந்தது.

இதற்கு முன்னதாக, இருபதாவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் மாகாணசபைகளின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதன்போது, கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்தது. மாகாண சபைகளுக்கிருக்கும் முக்கிய அதிகாரங்களை நாடாளுமன்றம் கைப்பற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் இருந்தன.

அந்த அபாயத்தைத் தெரிந்து கொண்டுதான், 20 க்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபையில் கைகளை உயர்த்தியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருந்தமையினால், அதைக் கைவிட்ட அரசாங்கம், உடனடியாக நடத்த வேண்டியுள்ள மாகாணசபைகளுக்குரிய தேர்தல்களை ஒத்திப் போடுவதற்கான வேறு வழிமுறைகளைத் தேடியபோது, மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் அதன் கைகளுக்குக் கிடைத்தது.

மாகாணசபைத் தேர்தல்களின் போது, பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்டமூலமொன்று, ஏற்கெனவே அரசாங்கத்தின் கையில் இருந்தது. அதை எடுத்துக் கொண்ட ஆட்சியாளர்கள், அதில் பாரியளவு மாற்றங்களைச் செய்தனர். மாகாணசபைகளுக்குப் புதிய கலப்பு முறைத் தேர்தலை, அந்த சட்டமூலத்தினூடாக முன்மொழிந்தனர். ‘மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம்’ எனும் பெயரில் அதைச் சபைக்குக் கொண்டுவந்தனர்; வென்றனர்.

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலமானது, இனி கலப்புத் தேர்தல் முறையிலேயே நடைபெறும். 50 சதவீதம் தொகுதிவாரியாகவும், 50 சதவீதம் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். புதிய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுவது முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பாக அமையும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. நாடு முழுவதும், இதுவரை முஸ்லிம் சமூகம் சார்பாகக் கிடைத்து வந்த மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் மாகாணசபை உறுப்புரிமை மிகக் கடுமையாகக் குறைவடையும். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டுதான், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமை தொடர்பில்,  முஸ்லிம் மக்களிடையே கடுமையான கோபம் உள்ளது. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, முஸ்லிம் சமூகத்துக்கு துரோகமிழைத்து விட்டனர் என்று, சமூக அக்கறையாளர்கள் கூறுகின்றனர். முஸ்லிம் சமய அமைப்புகளும் இது தொடர்பில் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளமை அவதானத்துக்குரியது.

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்த முஸ்லிம் கட்சிகள், தற்போது தாம் தவறிழைத்து விட்டதாகக் கவலைப்படுகின்றன. கடந்த புதன்கிழமை, அரச தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மேற்படி சட்டமூலத்துக்கு ஆதரவளித்தமை தமது தவறு என்பதை ஒத்துக் கொண்டார். அதேவேளை, அந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம். ஹரீஸும் அந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாகத் தானும், தமது கட்சியும் வாக்களித்திருந்தமை தவறானது என்று தெரிவித்திருந்தார்.

இந்தத் தவறை ஏன் செய்தோம், அதாவது மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தோம் என்பதற்கும் அந்த நிகழ்ச்சியினூடாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், பிரதியமைச்சர் ஹரீஸும் நிறையக் காரணங்களை முன்வைத்திருந்தனர். ஆனால், மக்களிடம் அவை எதுவும் எடுபடவில்லை என்பதை, சமூக வலைத்தளங்களில் மக்கள் எழுதிக் கொண்டிருக்கும் கருத்துகளைப் பார்க்கும் போது, விளங்கிக் கொள்ள முடிகிறது.

தமது அரசியல் லாபங்களுக்காக நாடாளுமன்றில் கைகளை உயர்த்தி விட்டு, வெளியில் வந்து மக்களிடம் தவறு செய்து விட்டோம் என்று அழுது புலம்புகின்றமையை, இவர்களுடைய அரசியல் நாடகமாகவே மக்கள் பார்க்கின்றனர்.

இந்த நிலையில்தான், இலங்கையின் அரசமைப்புச் சபையினுடைய வழிப்படுத்தும் குழுவினது இடைக்கால அறிக்கை, கடந்த மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 112 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த அறிக்கையில், முஸ்லிம் கட்சிகள் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள் தொடர்பிலும் முஸ்லிம் அரசியலரங்கில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு முஸ்லிம் கட்சிகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டும்தான், இடைக்கால அறிக்கையில் தனியான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு முன்மொழிவையும் தனித்துச் சமர்ப்பிக்கவில்லை.

அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணி  மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்து கூட்டு முன்மொழிவுகள் சிலவற்றைச் சமர்ப்பித்துள்ளன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனித்துச் சமர்ப்பித்துள்ள முன்மொழிவில், இலங்கை 26 நிர்வாக மாவட்டங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் எனக் கோரியுள்ளது. தென்கிழக்குக் கரையை அடிப்படையாகக் கொண்டு ஒலுவில் மாவட்டம் 26ஆவது நிர்வாக மாவட்டமாயிருத்தல் வேண்டுமெனவும் தமது கோரிக்கையில் விவரித்துள்ளது. முஸ்லிம்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையாகவுள்ள கரையோர மாவட்டக் கோரிக்கையே இதுவாகும்.

ஆனால், இடைக்கால அறிக்கையில் கரையோர மாவட்டக் கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் முன்மொழியவில்லை என்பது அவதானத்துக்குரியதாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் மிக நீண்ட காலமாக ரையோர மாவட்டம் குறித்துப் பேசி வருகிறது. ‘கரையோர மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாகப் பெற்றுத் தரும்’ என்று அந்தக் கட்சியினர் தேர்தல் மேடைகளில் உறுதிமொழி வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இருந்தபோதும், அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், கரையோர மாவட்டம் தொடர்பில் எந்தவிதமான முன்மொழிவுகளையும் முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்கவில்லை.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக அரசியல் செய்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கரையோர மாவட்டத்தை தனது முன்மொழிவில் கோரியுள்ளது. இந்த மாறுபட்ட நிலைமையானது, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடையே பாரிய அதிச்சியினையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கரையோர மாவட்டம் தொடர்பான முன்மொழிவை முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்திருந்ததாகவும், ஆனால் இடைக்கால அறிக்கையில் அது இடம்பெறவில்லை எனவும் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால், இது உண்மைதானா என்பதில் சந்தேகம் உள்ளது.

கரையோர மாவட்டம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்துள்ள முன்மொழிவு இடைக்கால அறிக்கையில், இடம்பெற்றுள்ள நிலையில், கரையோர மாவட்டம் குறித்து மு.கா வழங்கிய முன்மொழிவு ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

எனவே, இவ்விடயம் குறித்து அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற அங்கத்தவருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்னவிடம் பேசினோம்.

“அரசமைப்பின் இடைக்கால வரைவுக்கான முன்மொழிவுகளை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்திருந்தோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கவில்லை” என்று ஜயம்பதி விக்ரமரட்ன கூறினார்.

ஆனாலும், இதற்கு முன்னதாக முஸ்லிம் காங்கிரஸ் முன்மொழிவொன்றைத் தமக்கு வழங்கியிருந்ததாகவும், அதில் கரையோர மாவட்டம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கலாநிதி ஜயம்பதி குறிப்பிட்டார்.

எவ்வாறிருந்தபோதும், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் கரையோரை மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் கோரவில்லை என்பது, அந்தக் கட்சி மீதான பாரிய விமர்சத்துக்கும் கண்டனங்களுக்கும் வழிகோலியுள்ளது.

அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறது என்பதும் கவனிப்புக்குரியது.

இந்த நிலையில் புதிய அரசமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற அச்சம் இப்போதே, முஸ்லிம் மக்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய கெடுதல்களை ஏற்படுத்தும் எனத் தெரிந்திருந்தும், உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசமைப்பில் முஸ்லிம்களின் விருப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அதற்கும் ஆதரவளித்து விடுவார்களோ என்பதுதான், முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்குள்ள அச்சமாகும்.

முஸ்லிம் தலைவர்கள் தொடர்பில், முஸ்லிம் சமூகம் அச்சம் கொள்வதற்கு – நியாயம் நிறையவே இருக்கின்றன.

நன்றி: தமிழ் மிரர் (03 ஒக்டோபர் 2017) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்