சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி

🕔 August 1, 2015

Hakeem - Sainthamaruthu - 002
– அஹமட் –

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை, தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கித் தருவதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைச்சு அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் வைத்து உறுதியளித்தார்.

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை உருவாக்கித் தருமாறு, மிக நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ஹக்கீம் இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில், ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று வெள்ளிக்கிழமை இரவு, சாய்ந்தமருது கடற்கரையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இடம்பெற்றது.

பல்லாயிரக்கணக்காக ஆதரவாளர்கள் கூடியிருந்த, இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்படி உறுதிமொழியினை வழங்கினார்.
அக் கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்;

சாய்ந்தமருது பிரதேச சபையினை உருவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளில் தாம் ஈடுபட்டு வந்ததாக அவர் தெரிவித்தார். இதன் நிமித்தம், இதற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் செயலாளர் போன்றோரை – பல தடவை, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் சென்று சந்தித்துப் பேசியதாகவும், அதற்குரிய ஆவணங்களைத் தயார் செய்து வந்ததாகவும் கூறினார்.

அவ்வாறானதொரு நிலையில், திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாகவும், இல்லையென்றால், சாய்ந்தமருது பிரதேச சபைக்கான பிரகடனத்தினை, தாம் மேற்கொண்டிருப்போம் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறிருந்தபோதும், தேர்தலுக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்குவதை, தாம் சாத்தியமாக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அதனால், சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் ஹக்கீம் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாகுவதால், கல்முனை மாநகரத்துக்கோ, அதன் எல்லைகளுக்கோ, எந்தவித ஆபத்துக்களும் ஏற்பட்டு விடுமோ என, கல்முனை மாநகரகத்தவர்களோ, கல்முனைகுடி பிரதேசத்தவர்களோ, எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

அதேவேளை, சாய்ந்தமருது பிரதேச எல்லை தொடர்பில் எந்தச் சிக்கலும் கிடையாது என்றும், அதன் எல்லைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும் எனவும் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்ததோடு, எந்தவிதமான சிக்கலுமில்லாமல், சாய்ந்தமருது பிரதேச சபைக் கோரிக்கையினைத் தீர்த்து வைப்போம் என்றும் உறுதியளித்தார்.

இக் கூட்டத்தில், யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.Hakeem - Sainthamaruthu - 003Hakeem - Sainthamaruthu - 001
Hakeem - Sainthamaruthu - 004

Comments

புதிது பேஸ்புக் பக்கம்