தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம்

🕔 October 1, 2017

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாணசபையின் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தொழில் பெற்றுக் கொள்வதற்காக லட்சக் கணக்கில் பணத்தினைக் கொடுத்துள்ள இளைஞர்கள், தற்போது கிழக்கு மாகாண சபை கலைந்தமையினால் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரியவருகிறது.

அரச தொழில் மீது ஆசை கொண்ட இளைஞர்கள், எப்படியாவது ஏதாவதொரு அரச தொழிலைப் பெற்றுக் கொள்வதற்காக, கிழக்கு மாகாண சபையின் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை அணுகியுள்ளனர். இதன்போது, தொழிலுக்காக அந்த இளைஞர்களிடம் மேற்படி அரசியல்வாதிகள் பெருந்தொகை முற்பணத்தினைப் பெற்றுக் கொண்டதாகத் தெரியவருகிறது. ஆனாலும், அவர்களில் அதிகமானோருக்கு தொழில் வழங்கப்படாத நிலையிலேயே கிழக்கு மாகாணசபை கலைந்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி தனது முதலாவது சபை அமர்வுடன் ஆரம்பித்த கிழக்கு மாகாண சபை, நேற்று 30ஆம் திகதி நள்ளிரவு கலைந்தது.

அரச தொழிலைப் பெற்றுக் கொள்வதற்காக சில இளைஞர்கள் 05 லட்சம் ரூபா வரையில், மேற்படி அரசியல்வாதிகளிடம் பணம் கொடுத்துள்ளனர் எனவும் அறிய முடிகிறது.

கிழக்கு மாகாணசபையில் பதவி வகித்த மேற்படி அரசியல்வாதிகளில் சிலர், இவ்வாறு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, ஏராளமான இளைஞர்களிடம் பல மில்லியன் கணக்கான ரூபாய்களை இவ்வாறு முற்பணமாகப் பெற்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாம் ஏமாற்றப்பட்டுள்ளமையை புரிந்து கொண்டுள்ள  மேற்படி இளைஞர்கள், தாங்கள் கொடுத்த முற்பணத்தினைத் திருப்பப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சட்டத்தை நாடவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்