மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை

🕔 September 29, 2017

லங்கையில் தஞ்சமடைந்து தவிக்கும் மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்தியது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலையை இன்று வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

உலக நாடுகளிலே வாழும் நமது சமூகம் அட்டுழியங்களாலும் கொடுரங்களாலும் வதைக்கப்படுகின்றனர். மியன்மாரில் தாய்மார்கள், சிறுவர்கள், பாலகர்கள் என்ற பேதங்கள் பாராமல் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 06 மாத காலத்துக்கு முன்னர் அந்த நாட்டிலிருந்து எங்கேயோ தப்பிச் சென்ற மக்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் ஐ.நா நிறுவனத்தின் பாதுகாப்பில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது, இனவாதிகள் தங்களது கொடுரத்தை அவர்களின் மீது காட்டினர். இந்த நாசகார நயவஞ்சக கூட்டத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது எமது ரத்தம் கொதிக்கின்றது.

வில்பத்துவிலே இந்த மியன்மார் அகதிகளைக் குடியேற்ற நான் முயற்சிப்பதாக இனவாதிகள்  போலிப்பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே வில்பத்து தொடர்பில் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல வழக்குகளுக்கு முகம்கொடுத்து வருகின்றேன். எமது கட்சிக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாத ஒருவரை நாம் அரசியலுக்குள் கொண்டு வந்து அவருக்கு அரசியல் அந்தஸ்தை பெற்றுக்கொடுத்து எம்.பி. ஆக்கியதன் விளைவையும் நாம் இன்று உணர்கின்றோம். என்னைப்பழி வாங்குவதற்காக நினைத்து நமது பூர்வீகப்பிரதேசத்தை இனவாதிகளிடம் பொய்யாகக் காட்டிக்கொடுத்து எமக்கு எதிரான பல பிரசாரங்களை மேற்கொள்வதற்கு அவர் முன்னின்று செயற்பட்டார்.

தனியார் ஊடகம் ஒன்றின் உதவியுடன்
 இந்த இழிசெயலை அவர் மேற்கொண்டதன் மூலம் எமக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பறிகொடுக்கக்கூடிய ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். அத்துடன் ஏற்கனவே வன இலாக்காவினருக்கு சொந்தமாக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட காணிகளையும் மீண்டும் பறிகொடுத்து விடுவோமா என்ற ஏக்கம் இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது.

05 வருடங்களுக்கு முன்னர் இந்தப்பிரதேசத்தில் நாங்கள் குடியேறிய நிலைக்கும் இப்போதைய நிலைக்குமிடையே பல தேவைப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.  ஒரு காலத்திலே தூரப்பிரதேசமாகவும் கஷ்டப்பிரதேசமாகவும் பாரக்கப்பட்ட மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி பிரதேசங்கள் இன்று படிப்படியாக அபிவிருத்தி கண்டு வருகின்றன. கட்டார் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஜாசீம் சிட்டியை உருவாக்கினோம். இலவங்குளம் பாதையை புனரமைத்து திறக்க நடடிக்கைகள் எடுத்த போது இனவாதிகள் போட்ட வழக்குகளுக்கு முகங்கொடுத்து அதனை எதிர் நோக்குகின்றோம்.

ஜப்பானிய அரசின் விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க  மன்னார் மாவட்ட பாடசாலைகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கும் இன்னோரன்ன தேவைகளுக்கும் சுமார் 60 கோடி கிடைத்தது. அதன் மூலம் அழகிய, வசதியான கட்டிடங்களை நாம் அமைத்துள்ளோம். யு.என்.ஹெபிட்டாட் நிறுவனம் பன்னூற்றுக்கணக்கான வீடுகளை இந்தப்பிரதேசத்தில் அமைத்துத் தந்தமைக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் நாம் பிரிந்து செயற்பட்டால் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம். சிலர் இந்தப்பிரதேசத்தில் எல்லை நிர்ணயத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முயற்சிப்பதாக அறிகிறோம். தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாதவர்கள், மக்கள்செல்வாக்கு இல்லாதவர்கள், தேர்தல் பீதியில் தத்தளிப்போரே இவ்வாறான வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை குழப்பியடிக்க நினைக்கின்றனர்.  சமூகத்துக்கு பாதிப்பான இந்த நகர்வுக்கு இடமளிக்கக் வேண்டாம்.

எல்லை நிர்ணய அறிக்கையின் மூலம் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் எமக்கு நன்மைகள் கிடைக்குமென உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே நம்பிக்கையுடன் செயற்படுவோம். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்