கரையோர மாவட்டத்தை மு.கா. தலைவர் கை கழுவிய கதை அம்பலம்; மறைக்கப் பார்த்தார் ஹரீஸ், அம்பலமாக்கினார் றிசாட்

🕔 September 28, 2017

– முன்ஸிப் அஹமட் –

ல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று, புதிய அரசியலமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்மொழிவொன்றினை சமர்ப்பித்திருந்த போதும், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் அது சேர்க்கப்படாமல் போயுள்ளதாக, பிரதியமைச்சரும் மு.காங்கிரசின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இந்த விடயத்தை தனது கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம், தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் நேற்று புதன்கிழமை இரவு கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இலங்கையிலுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள நிலையில், கரையோர மாவட்டத்தை மு.காங்கிரஸ் ஏன் கோரவில்லை என்று, நிகழ்ச்சி நடத்துநர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே, பிரதியமைச்சர் ஹரீஸ் மேற்கண்ட பதிலை வழங்கினார்.

எவ்வாறாயினும், பிரதியமைச்சர் ஹரீஸ் கூறுவது அப்பட்டமான பொய் என்று, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அடித்துக் கூறினார்.

புதிய அரசியலமைப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் எவையும், இடைக்கால அறிக்கையில் சேர்க்கப்படாமல் போகவில்லை என்றும், கட்சிகளின் முன்மொழிவுகள் எவையும் தவற விடப்பட்டுள்ளனவா என்பதை, சரி பார்ப்பதற்கான சர்ந்தப்பம் அனைவருக்கும் வழங்கப்பட்டதாகவும் இதன்போது அமைச்சர் றிசாட் சுட்டிக்காட்டினார்.

எது எவ்வாறாயினும், கரையோர மாவட்டம் பெற்றுத் தருவோம் என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடம் தேர்தல் காலங்களில் கூறி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ், புதிய அரசியல் யாப்பில் அவ்வாறான முன்மொழிவுகள் எதனையும் வழங்கவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்