வடக்குடன் கிழக்கை இணைய விடமாட்டோம், நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் எதிர்ப்போம்: பிரதியமைச்சர் ஹரீஸ்

🕔 September 28, 2017

– முன்ஸிப் அஹமட் –

டக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒருபோதும் இணையாது என்றும், அதற்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் மு.காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும்  பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

தமது இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் , கிழக்கு மாகாணத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் ஆக்ரோசமாகக் கூறினார்.

வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் நேற்று புதன்கிழமை இரவு கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“வடக்கு – கிழக்கு தொடர்பில் நீங்கள் கூறிய இந்தக் கருத்து,  உங்கள்  கட்சியினுடைய நிலைப்பாடா” என்று, இதன்போது ஹரீஸிடம் நிகழ்ச்சி நடத்துநர் முஷரப் கேட்டபோது; “ஆம், கட்சியினுடைய நிலைப்பாடுதான். எனது கட்சிக்குள் இருக்கும் யாராவது, இது ஹரீஸுடைய நிலைப்பாடுதான், கட்சியினுடைய நிலைப்பாடு அல்ல என்று கூறிக் கொண்டு, முடிந்தால் வரட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்வோம்” எனவும், அவர் இதன்போது சவால் விடுத்தார்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. அதேவேளை மேற்படி இரண்டு மாகாணங்களும் இணைக்கப்படக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்மொழிவொன்றினை சமர்ப்பித்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய நிகழ்ச்சி நடத்துநர்; “வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன” என்று கேட்டபோதே, பிரதியமைச்சர் ஹரீஸ் மேற்கண்ட பதிலைக் கூறினார்.

வீடியோ

Comments