கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு, மது உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்க ஹக்கீம் எதிர்ப்பு

🕔 September 27, 2017
– பிறவ்ஸ் –

ல்லோயா பிளான்டேஷன் நிறுவனம் மதுசாரம் உற்பத்தி செய்வதற்கு அனுமதிகோரி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு எதிராக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்த நிறுவனத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையில் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. குறித்த நிறுவனம் விவசாயிகளுக்கு கரும்பு கொள்வனவின்போது நியாயமான விலையை வழங்குவதில்லை. கரும்பு கொள்வனவுக்கு நிர்ணயவிலை வழங்கப்படாத காரணத்தினால் விவசாயிகள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

இந்த நிறுவனத்தை பொறுப்பேற்றபோது, திறைசேரியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை முதலில் பரிசீலிக்கவேண்டும். விவசாயிகளுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கின்ற இந்நிறுவனம், தனது வருமானத்தை மட்டும்தான் பார்க்கின்றது.

விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு எவ்வித முயற்சிகளையும் செய்யாத இந்நிறுவனம், அப்பாவி விவசாயிகளின் உழைப்பை சுரண்டும் வேலையைத்தான் தொடர்ந்தும் செய்துகொண்டு வருகிறது. இதனால் குறித்த நிறுவனத்துக்கு மதுசாரம் உற்பத்தி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை கொடுத்து மீண்டும் மீண்டும் உழைப்பை சுரண்டுகின்ற வேலையை செய்யவேண்டாம் என்று ரவூப் ஹக்கீம் தனது கடுமையான எதிர்ப்பை அமைச்சரவையில் வெளியிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில், இறக்காமம் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் துசித வணிகசிங்விடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்துரைத்தார்.

கரும்பு செய்கையாளர்களுக்கு நிர்ணயவிலை வழங்கப்படாத காரணத்தினால், அவர்கள் நெல் பயிரிடுவதையே விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் கரும்புச் செய்கை பண்ணுவதிலிருந்து 700 ஏக்கர் காணியை நெல் பயிரிடுவதற்கு விடுவித்து தருமாறு கோருகின்றனர். அப்படி இல்லாவிடின் கரும்புக்கு நிர்ணய விலையை பெற்றுக்கொடுங்கள் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

(மு.கா. தலைவரின் ஊடகப் பிரிவிலிருந்து அனுப்பப்பட்ட செய்தி)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்