கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

🕔 September 27, 2017

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியேகப் பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, கிழக்கு மாகாணசபை வளாகத்தினுள் வைத்து, நபர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக, திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்ற போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் வேலையொன்றினை முடித்துக் கொள்ளும் பொருட்டும், இறுதி அமர்வினை காண்பதற்காகவும் அட்டாளைச்சேனையிலிருந்து இளைஞர் ஒருவர், கிழக்கு மாகாண சபைக்கு திங்கட்கிழமை சென்றிருந்தார்.

இதன்போது, குறித்த இளைஞரைக் கண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகப் பணியாளரான சியாம் என்பவர், அந்த இளைஞரை விரட்டி, தாக்கும் பொருட்டு அடாவடித்தனமாக நடந்துள்ளார். ஆயினும் அங்கிருந்தவர்கள், இளைஞரைக் காப்பாற்றியுள்ளனர்.

மேற்படி சியாம் என்பவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவராவார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர் இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக பணியாளரான சியாம் என்பவர், தன்னைத் தாக்குவதற்கு முற்பட்ட வேளை எடுக்கப்பட்ட வீடியோ பதிவினையும், இதன்போது குறித்த இளைஞர் பொலிஸாரிடம் காண்பித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை, நாளை வியாழக்கிழமை திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்