மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல்
இலங்கையில் அடைக்கலமாகியுள்ள மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றினை, பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்தமையினால் இன்று செவ்வாய்கிழமை காலை அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது.
சிங்கலே ஜாதிக பலமுளுவ எனும் அமைப்பினர் இன்று காலை, மேற்படி வீட்டினை சுற்றி வளைத்தனர்.
இதன்போது பௌத்த பிக்குகளுடன் டான் பிரசாத் எனும் ரௌடியும் இணைந்து, மியன்மார் அகதிகளைத் தாக்குவதற்கு முயற்சித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ரோஹிங்யர்கள் அகதிகள் அல்லர் என்றும், அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் இதன்போது, சுற்றி வளைத்தவர்கள் கோசமிட்டனர்.
வடக்கு கடல் பகுதியில் தத்தளித்த 36 ரோஹிங்யர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் மேற்படி ரோஹிங்யர்களை ஐ.நா.சபையின் அகதிகளுக்கான ஆணையம் பொறுப்பேற்றது.
அந்த அகதிகள்தான் கல்கிஸ்ஸையிலுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்றைய குழப்பகரமான சூழ்நிலையினை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கல்கிஸ்சை பொலிஸார், ரோஹிங்ய அகதிகளை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.