வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

🕔 September 25, 2017
– ஆர். ஹஸன் –

“வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும்” என்று தலைவர் அஷ்ரப் கூறினார். அதன் அடிப்படையில் ‘வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற விடயத்தில், இன்று நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

“கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்” என தலைவர் அஷ்ரப் வலியுறுத்தினார். அதற்கான சூழ்நிலைகளை நாங்கள் இன்று உருவாக்கி வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் நடைபெறும் ‘மக்களுடன் மண்ணின் மைந்தன்’ எனும் நேரடி கேள்வி – பதில் நிகழ்வில், மேற்கண்ட விடயங்களை அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்தான். அதன் கொள்கையின் அடிப்படையிலேயே எனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். ஆனால், அந்தக் கட்சியின் தலைமைத்துவத்துடன் இணைந்து செயலாற்றுவது என்பது என்னைப் பொறுத்தவரை கஷ்டமான காரியம். அதனால், அதிலிருந்து வெளியேறி அதன் கொள்கையை, வேறு விதத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.

இருந்த போதிலும், எனக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கும் எந்த விதமான பிரச்சினைகளும் கிடையாது. நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் நெருக்கமாகவே இருக்கின்றோம்.  முஸ்லிம் சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களில் இணைந்து நல்ல நோக்கத்துடன் செயற்படுகின்றோம்.

நான் வேறு கட்சியில் இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய கொள்கைகளைத்தான் பின்பற்றுகின்றேன். தலைவர் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த நோக்கத்துக்காகவும் கொள்கைக்காகவும் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த லட்சியத்தை அடைந்து கொள்வதற்கும்,  அந்த கொள்கையை  வழிநடத்துவதற்குமான சூழ்நிலைகளை நாங்கள் இன்று உருவாக்கி வருகின்றோம்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சார்ந்த விடயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என தலைவர் வழிகாட்டியுள்ளாரோ அதன் அடிப்படையில் நாங்கள் இன்று வரை செயலாற்றி வருகின்றோம். அதில் எந்தவித மாற்றங்களும் கிடையாது.

தலைவர் அஷ்ரப் வழிகாட்டிய கொள்கையை நாங்கள் முழுமையாக பின்பற்றி வருகின்றோம். ‘வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும்’ என தலைவர் அஷ்ரப் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் நாங்கள் இன்று ‘வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற விடயத்தில்  உறுதியாக இருக்கின்றோம்.
இன்று நாங்கள் எமது உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, தலைவர் அஷ்ரபின் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காகத்தான் நாங்கள் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்