புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

🕔 September 24, 2017

– பசீர் சேகுதாவூத் –

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத் தடியில் வைத்து உள் நுழைத்து அடி விழுகிறதா இல்லையா என்று பரீட்சித்துப் பார்த்து, வீட்டுக்காரரின் தூக்கத்தை உறுதி செய்த பின் வீட்டுக்குள் நுழைகிற பழைய சிங்களக் கதைதான் நினைவுக்கு வந்தது.

இவ்வறிக்கையும் நாட்டு மக்களின் உணர்வுகளை அறிவதற்கென பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணமாகவே தெரிகிறது.

நாடி பிடித்துப் பார்த்தல்

இது மூன்று நான்கு தசாப்த காலமாகப் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய நேர்மையான நேரடி அணுகுமுறையல்ல.

சிங்கள மற்றும் தமிழ் மக்களின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து அதற்கேற்ப ஒரு அரசமைப்புச் சட்ட வரைவைத் தயாரிப்பதை நோக்காகக் கொண்டு இவ்வறிக்கையில் மூடுண்ட, தெளிவற்ற பல விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

போலி முகங்கள்

இவ்வறிக்கையில் உள்ளடங்கியுள்ள நாட்டின் தன்மை பற்றிய முன் மொழிவு சிங்கள மக்களுக்கு ஒரு முகத்தையும், தமிழ் மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டுகிறது. அதேவேளை, இவ்வறிக்கை முஸ்லிம்களுக்கு முகத்தை மட்டுமல்ல உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எதையும் காட்டாமல் “புர்க்கா”அணிந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

சிங்களத்தில் “ஏக்கீய ராஜ்ய” என்று குறிப்பிட்டு சிங்களவர்களைத் திருப்திப்படுத்த முற்பட்ட அதேவேளை, தமிழில் “ஒருமித்த நாடு” என்ற பதத்தைப் பயன்படுத்தி தமிழர்களைத் திருப்திப்படுத்த முற்படுகிறது இவ்வறிக்கை.

“பிரிக்கமுடியாத, பிளவுபடுத்த முடியாத ஒரேநாடாக” இலங்கை இருக்க வேண்டும் என்றும் பிரிவினையைத் தடுப்பதற்கு அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பது வழிகாட்டல் குழுவின் புரட்டையே வெளிப்படுத்துகிறது.

பிரிவினைக்கும், பிளவுக்கும் இடையே உள்ள சட்டரீதியான வேறுபட்ட புரிதல் என்ன? மேலும், பிரிவினையைத் தடுப்பதற்கென அரசியலமைப்பில் விசேட ஏற்பாடு வேண்டும் என்பது குழப்பத்தின் உச்சமல்லவா?

“ஒருமித்த” என்ற தமிழ்ச் சொல்லின் கருத்துப் புரிதலை முன்பு பிரிந்திருந்தவை மீண்டும் இணைந்து கருத்து ‘ஒருமித்து’ செயலாற்றல் என்றும் கொள்ளலாம். ஒரு சத்திரசிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்துவது போல் தமிழ் மக்களுக்காக இப்பதம் பாவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் நாட்டின் தன்மை பற்றி என்றுமே அக்கறை செலுத்தியதில்லை.அவர்கள் தமக்கான ஒரு முஸ்லிம் பெரும்பான்மை அலகு பற்றியே அக்கறை செலுத்தி வந்தனர்.அறிக்கை முஸ்லிம்களின் இந்த அபிலாஷை பற்றி கடைக் கண் பார்வையையும் செலுத்தவில்லை.

முன்னால் கட்டப்பட்ட ‘கரட்’

மாகாண அலகுகள் பற்றிக் குறிப்பிடுகையில் மூன்று முரணான பரிந்துரைகள் காணப்படுகின்றன. மாகாணங்களின் இணைப்புக்கு அந்தந்த மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு செய்யப்பட வேண்டும், இணைப்புக்கான ஏற்பாட்டை அரசமைப்பு கொண்டிருக்கக் கூடாது, வடகிழக்கு மாகாணங்களை ஒரே அலகாக அரசமைப்பு அங்கீகரித்தல் வேண்டும் என்பனவே அம்மூன்று தெரிவுகளாகும். சர்வஜன வாக்கெடுப்பு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு முன்னாலும், இணைப்புக்கான ஏற்பாடு அரசமைப்பில் இருக்கக் கூடாது என்பது சிங்கள மக்ககளுக்கு முன்னாலும், வடகிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களுக்கு முன்னாலும் கட்டப்பட்டுள்ள ‘கரட்’ ஆகும். இப்பரிந்துரை வழிகாட்டல் குழு நீதி வழங்கத் திராணியற்றது என்பதைத் தவிர வேறெதையும் தெரிவிக்கவில்லை.

ஏமாற்றம்

இவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கும் காணி உரித்து தொடர்பான சிபாரிசு தற்போது இருக்கும் பட்டியல் முறையை விட எந்த விதத்திலும் முன்னேற்றகரமானதல்ல.

தேர்தல் முறை மாற்றம் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் சுமார் 30 வருடங்களாக அனுபவித்துவரும் சுதந்திரத்தை முழுவதுமாகப் பறித்தெடுக்கும் உள் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சமூகப் பேரவைகள் பற்றிய பரிந்துரை மட்டுமே தெளிவாகக் காணப்படுகிறது. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீண்டகாலமாகக் கூறி வருகிற அதிகாரப் பரவலாக்க முறைமையாகும்.

சட்ட வரைவு செய்யப்பட்டு பேரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்பே அறிக்கையின் தாற்பரியம் புலனாகும்.

பழைய கஞ்சி

மாகாண ஆளுநர் தொடர்பான குறிப்புரை, சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழுகிற வடக்கு, கிழக்கு மாகாணங்களை அரசியலமைப்பின் மூலம் ஒற்றைச் சிங்களவர் ஆளுவதற்குரிய பழைய ஏற்பாடன்றி வேறொன்றுமில்லை. வழிகாட்டல் குழுவுக்கு தைரியமிருந்தால் ஆளுநர்கள் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் தினத்தில் வேறொரு வாக்குச் சீட்டு மூலம் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும் என்று பரித்துரைத்திருக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்