மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, அமைச்சர் ராஜிதவுக்கு எரான் பாராட்டு
மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன பாராட்டுத் தெரிவித்தார்.
தேசிய மருந்து ஒழுங்கமைப்பு அதிகாரச் சட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ராஜிதவை ஏரான் பாராட்டினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;
“மருந்துப் பொருட்கள் தொடர்பான மாஃபியா ஒன்று உள்ளமை குறித்து எமக்குத் தெரியும். மருந்துகள் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை மருந்துக் கொள்கையொன்றினை அறிமுகப்படுத்த முடியவில்லை. ஆனால், தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித, அதைச் செய்திருக்கிறார். 48 மருந்துப் பொருட்களுக்கான விலையினை அவரால் குறைக்க முடிந்திருக்கிறது” என்றார்.
அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கை, மக்களை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், வைத்தியர்களை மையப்படுத்தி உருவாக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.