ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை

🕔 July 31, 2015

PHI - 01
– பி. முஹாஜிரீன் –

லுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு, நேற்று வியாழக்கிழமை –  திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட பொதுச் சுகாதார அதிகாரிகள், அங்கு பரிசோதனை நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டனர்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில், சிரேஷ்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எம். ஜௌபர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு விஜயம் செய்து, மீன்பிடி துறைமுகப் பகுதியினை பரிசோதனை செய்தனர்.

மீன்பிடித் துறைமுகத்திலுள்ள மீன் சேகரிக்கும் நிலையத்தில் மீன்கள் வெட்டப்படும் நிலையில், அதன் கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாமையினால், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இந்த திடீர் விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக, சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

மீன் சேகரிப்பு நிலையத்தில், மீன்களை வெட்டுவது தடை செய்யப்பட்டு்ளள போதிலும், அதனை மீறி வியாபாரிகள் செயற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தினை, ஒரு வார காலத்துக்குள் துப்பரவு செய்யுமாறும், கழிவு நீரை சீரான முறையில் அகற்றுவதற்கு சம்மந்தப்பட்ட துறைமுக அதிகார சபையினர் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும், சுகாதார வைத்தியதிகாரி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதனை மீறும் பட்சத்தில், துறைமுக அதிகார சபையினருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி கூறினார்.PHI - 02

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்