புதியதோர் படுகுழி செய்தோம்
– பசீர் சேகுதாவூத் –
மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.இத்திருத்தச் சட்டமூலத்தினால் அகோரமாகப் பாதிக்கப்படவிருக்கும் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ளன. அதாவது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள், தமது சொந்த இன மக்களின் நலனையும் சொந்தக் கட்சியின் நலனையும் புறந்தள்ளிவிட்டு எஜமான விசுவாசத்தை முன்னிலைப்படுத்தி செயல்பட்டிருக்கின்றன.
நேற்றைய நாடாளுமன்றக் குழு நிலை அரங்கில் 60:40 என்றிருந்த தொகுதி முறை மற்றும் வீதாசார முறை ஆகியன 50:50 என்பதாக திருத்தப்பட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை இதுவரை எனக்குப் புலப்படவில்லை. ஆயினும், இம்மாற்றத்தினால் மேற்சொன்ன இரு சிறுபான்மைத் தரப்புக்கும் எந்தவித நன்மையும் கிடையாது.
தேசிய அரசாங்கம் அமைத்திருக்கின்ற இக்காலத்தில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறபோது மட்டுமே, சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்புக் கிடைக்கிறது. இரண்டு சிறுபான்மை இனங்கள் நேரடியாகப் பாதிப்படைகிற ஒரு சட்டவாக்கத் தருணத்தில், இந்த வாய்ப்பை உபயோகிக்காமல் இவ்விரண்டு பிரிவினரின் பிரதிநிதிகள் இன்று ஒத்தூதியிருப்பது மிகப்பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு 07 ஆசனங்களும் , மக்கள் காங்கிரசுக்கு 05 ஆசனங்களுமாக முஸ்லிம் தனித்துவம் பேசுகிற இரு கட்சிகளுக்கும் 12 ஆசனங்கள் இருக்கின்றன. இவர்கள் ஆதரவளிக்காமல் விட்டிருந்தால் அரசாங்கத்தால் 142 வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்க முடியும். இவ்வாறு நிகழ்ந்திருந்தால் திருத்தச் சட்டம் 2/3 பெரும்பான்மை பெறாமல் தோல்வி கண்டிருக்கும். தமிழ் முற்போக்கு முன்னணியும் சூழ்நிலைக்கு ஏற்ப முஸ்லிம் கட்சிகளின் முடிவை எடுத்திருக்கக் கூடும்.
சிறுபான்மைக் கட்சிகளுக்கு இருந்த பெருந்தேசியக் கட்சிகளிடம் பேரம் பேசிக் காரியம் சாதிக்கும் வல்லமை பறிபோய்விட்டது. இப்போது பெருந்தேசியக் கட்சிகள் சிறுபான்மைக் கட்சிகளிடம் பேரம் பேசி அல்லது அச்சுறுத்திக் காரியம் சாதிக்கும் தலைகீழ் நிலை வந்துள்ளது. இதற்கு நேற்றைய வாக்களிப்பு சிறந்த ஓர் உதாரணமாகும். சிறுபான்மைக் கட்சிகளின் தற்காலத் தலைமைகள் தமது தனிப்பட்ட தவறுகள் மற்றும் பெரிய கட்சிகளிடம் தாம் வாக்குகளை ஒற்றி எடுக்கும் உபாயத்தைக் கையாள்தல், பணம் பெறுதல் ஆகியவற்றினால் பலவீனமாகியிருப்பதே இந்நிலைமை ஏற்பட்டிருப்பதற்குப் பிரதான காரணமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தவிர்ந்த ஏனைய தற்கால சிறுபான்மைத் தலைமைகள் தமது சொந்தத் தேர்தல் வெற்றிக்கும், சில மாவட்டங்களில் தமது கட்சிக்கு ஆசனங்களை அதிகரித்துக் கொள்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியிருக்கும் நிலைமையைத் தோற்றுவித்துவிட்டன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் பெருந்தொகை வாக்குகள் காணப்படுகின்றன. தொண்டமான் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரது திடகாத்திரமான தலைமைத்துவத்துக்குப் பிறகு ஐக்கிய தேசியக்கட்சி மேற்படி இரண்டு சிறுபான்மை வாக்காளர்களுக்குள்ளும் கொழுத்துப் பருத்து விட்டது. இந்த இரு துணிகரத் தலைமைகளின் நிரப்ப முடியாத வெற்றிடத்தினால் இவ்விரண்டு சிறுபான்மையினரின் தனித்துவ அரசியலும் நலிவடைந்து விட்டது.
உள்ளூராட்சித் தேர்தல் முறைமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் முறைமை ஆகியன மாறிவிட்டன. எதிர்காலத்தில் தேவை வரும்போது, நாடாளுமன்றத் தேர்தல் முறையும் மாறும். குறித்த நமது சிறுபான்மைத் தலைவர்களுக்கு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கும், அமைச்சுப் பதவிகள் வழங்குவதற்கும் பெரிய கட்சிகளால் உத்தரவாதம் வழங்கப்படும் அவர்கள் தமது எஜமான விசுவாசத்தை முன்னரை விட அதிகமாகக் காட்டுவார்கள். சட்டங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும். நமது கட்சிகள் மாட்டு வண்டியின் கீழே நடந்து செல்லும் நாய்கள் போல இவ்வண்டியை நானே இழுத்துச் செல்கிறேன் என்று பிரச்சாரம் செய்யும்.
பாதிக்கப்படும் இரண்டு சமூகங்களும் பெருந்தேசியக் கட்சி எனும் பாரமேற்றப்பட்ட வண்டியை வாயிலும், நாசித் துவாரங்களிலும் நுரை கக்கியபடி மூச்சிரைக்க வெற்றிக்கம்பத்தை நோக்கி இழுத்துச் செல்லுகிற ஒரு சோடி எருதுகளாக்கப்பட்டுவிடும்.
சமூகங்கள் வீழ்ந்தாயினும் தலைமகள் வாழ்ந்தால் சரிதானே.