கரி நாள்: அஷ்ரப் பெற்றுத்தந்தது, இன்று பறிபோகிறது

🕔 September 20, 2017

– பசீர் சேகுதாவூத் –

ரணமாக்கப்பட்ட பெருந் தலைவர் அஷ்ரஃப், சிறுபான்மை மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமது சொந்தக் கட்சிகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விகிதாசாரத் தேர்தல் முறையில் 12% ஆக இருந்த வெட்டுப் புள்ளியை சட்டத் திருத்தம் செய்து 5% ஆகக் குறைத்துப் பெற்றுத் தந்தார்.

அன்றைய ஜனாதிபதி வேட்பாளரான ஆர். பிரேமதாசாவிடம் 1989 ஆம் ஆண்டைய தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதற்கு பிரதியுபகாரமாக, சிறுபான்மையினருக்கான இந்த அனுகூலத்தைப் பெற்றார். இதே வருடம் முதன் முதலாக நாடாளுமன்றத் தேர்தலில் பங்குபற்றிய மு.காங்கிரஸ் 04 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதில் இருந்துதான் முஸ்லிம்களின் தனித்துவத் தேசிய அரசியல் வீரியத்துடன் முன்னகரத் தொடங்கியது. பெருந்தேசியக் கட்சிகளில் விலங்கிடப்பட்டுக் கிடந்த நமது அரசியல் விடுதலையடைந்து 27 வருடங்களாகிவிட்டன.

நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட வியாக்கியானத்தினால் 20 ஆவது திருத்த நிறைவேற்றம் சிக்கலுக்குள் அகப்பட்டிருப்பதால், அரசாங்கம் இன்று 20ஆம் திகதி புதன்கிழமை, நாடாளுமன்றத்தில் அவசரமாக மாகாண சபைத் தேர்தல் முறை மாற்றத்துக்கான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றவிருக்கிறது. இச்சட்டத்தை சாதாரண பெரும்பான்மையோடு நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என சட்ட மா அதிபர் அபிப்பிராயத்தை வழங்கியுள்ளார். இச்சட்டம் இலகுவாக நிறைவேறி விடும்

உள்ளூராராட்சித் தேர்தல் முறைமை அண்மையில் திருத்தப்பட்டபின் உள்ளவாறே, தொகுதி அடிப்படையில் 60% மும், வீதாசார அடிப்படையில் 40% மும் மாகாண சபைகளிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இம்முறையால் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் சிறுபான்மைக் கட்சிகளின் வெற்றி நிச்சயமற்றாகும். இதனால் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையினர், ஒட்டுமொத்தமாக பெரிய சிங்களக் கட்சிகளின் வெறும் வாக்களிப்பு இயந்திரங்களாக மாற்றப்படுவர். சிறுபான்மை உறுப்பினர்கள் தமது இனத்தின் நன்மைகளுக்காகவன்றி பெரிய கட்சிகளின் ஏவல்களை நிறைவேற்றும் வேலையாட்களாக செயற்படவேண்டிவரும்.

விருப்பு வாக்கு அளிக்கப்படுவதில்லை. ஆதலால் கட்சியின் செயலாளரே 40% உறுப்பினரைப் பட்டியலில் இருந்தோ அல்லது தொகுதிகளில் தோல்வி கண்ட உறுப்பினர்களையோ நியமிக்கும் அதிகாரத்தைப் பெறுவதால், கட்சிகளுக்கு கூஜாத் தூக்காமல், தலைவருக்கு ஜால்றாப் போடாமல் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெரிய கட்சிகளில் போட்டியிடும் அல்லது மாவட்டப் பட்டியலில் சேர்க்கப்படும் வேட்பாளர்கள் பதவியைப் பெற முடியாது.

வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் கொஞ்சமாயினும் செல்வாக்குள்ள மலையக முற்போக்குக் கூட்டு முன்னணியோ, முஸ்லிம் காங்கிரசோ, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசோ இனிமேல் சொந்தக் காலில் நின்று வெற்றி பெற முடியாது. சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டமைத்தாலும் அப்பெரிய கட்சிகளின் செயலாளருக்கே தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உண்டென்பதனால், சிறுபான்மை அரசியல்வாதிகள் பெரிய கட்சிகளில்தான் வேட்பாளர்களாக இருக்க விரும்புவர். இதனால் தெற்கில் சிறிய கட்சிகள் அழியக் கூடும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அச்சமூட்டுவது, எதிர்கால நாடாளுமன்றத் தேர்தல் முறையும் எதிர்காலத்தில் நிச்சயமாக இந்த அடிப்படையில் மாற்றப்படும் என்பதாகும்.

எனவே, அஷ்ரஃப் பெற்றுத் தந்த முஸ்லிம் மற்றும் மலையகச் சிறுபான்மை மக்களுக்கான உரிமையும், அவர்களது கட்சிகளுக்கு இவ்வளவு காலமும் தேசிய அரசியலில் இருந்து வந்த பேரம் பேசும் சக்தியும் இன்றுடன் பறி போகும் பயணம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இதனால், செப்டம்பர் 20 – ஒரு துயரார்ந்த கரி நாளாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்