பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும், நல்லாட்சி அரசாங்கம்
– அ. அஹமட் –
முஸ்லிம்கள் சம்பந்தப்படும் எந்த விடயத்தை எடுத்து நோக்கினாலும் இந்த அரசாங்கமானது, முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றது. மியன்மார் விடயத்திலும் அதுவே நடந்தேறியுள்ளது.
ஸ்ரீலங்கா தௌஹித் ஜமாத்தின் கண்டனப் பேரணியில் தலையிட்ட நீதிமன்றம், பேரினவாதிகளின் கண்டனப் பேரணி விடயத்தில் எந்தவித தலையீட்டையும் செய்திருக்கவில்லை. குறைந்தது, இரு தரப்பினருக்கும் தடையுத்தரவை அல்லது பூரண அனுமதியை வழங்கி நடுநிலை பேணியிருக்கலாம். ஸ்ரீலங்கா தௌஹித் ஜமாத்துக்கு ஒரு நீதியும், பேரினவாதிகளுக்கு ஒரு நீதியும் கடைப்பிடித்ததிலிருந்து, நடுநிலையில் இருந்து விலகி, பேரினவாதிகளுக்கு ஆதரவுப் போக்கு கடைப்பிடிக்கப்படுகின்றமை துல்லியமாகிறது.
அது மாத்திரமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில், மியன்மார் நாட்டவர்களுக்கான விசாவையும் இவ்வரசாங்கம் தடை செய்துள்ளது. இலங்கையில் மியன்மார் அகதிகள் உள்ள நிலையில், இலங்கையில் மியன்மார் அகதிகள் இல்லை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறும் நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிலை உள்ளது.
வடகொரியா விடயத்தில் கண்டன அறிக்கை விடும் இவ்வரசாங்கத்தால், மியன்மார் விடயத்தில் வாய் திறக்க முடியவில்லை. இதுவெல்லாம் இந்த அரசாங்கமானது, பேரினவாதிகளை திருப்தி செய்ய முனைவதை எடுத்துக்காட்டுகிறது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இனவாதிகளோடு சேர்ந்து கூப்பாடு போடாமல், மியன்மார் மக்கள் இல்லையென கூறியதன் மூலம் முஸ்லிம்களுக்கு சார்பான போக்கை கடைப்பிடித்துள்ளமையை பாராட்டியேயாக வேண்டும். மியன்மார் மக்களுக்கு மியன்மார் நாட்டில் கூட குடியுரிமை இல்லை. அவர்களுக்கு எவ்வாறு விசா இருக்க முடியும்? இப்படியான நிலையில் அதனை கூட தடை செய்வதன் மூலம், இந்த அரசாங்கத்தின் இனவாத சிந்தனையின் அளவை மட்டிடலாம்.
இந்த அரசாங்கத்தைத்தான் முஸ்லிம்கள் வரிந்து கட்டிக் கொண்டு, ஆட்சிக்குக் கொண்டுவந்தார்கள். இதற்கு முஸ்லிம்கள் வெட்கப்பட வேண்டும்.
(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)