மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைக்க, அரசாங்கம் திட்டம்; ஆளுநர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவும் முடிவு

🕔 September 18, 2017

– மப்றூக்-

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலையவுள்ள நிலையில், அவற்றுக்கான தேர்தல்களை ஒரு வருட காலத்துக்கு ஒத்தி வைப்பதற்கான நடவடிக்கையொன்றினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, தேர்தல்கள் நடத்தப்படும் வரை, மாகாண சபைகளை ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றில் நாளை மறுதினம் 20ஆம் திகதி திருத்தச் சட்டமூலமொன்றினைக்  கொண்டு வந்து, அதனை அமுல்படுத்துவதனூடாக மேற்கண்ட விடயங்களை அரசாங்கம் சாதிக்கவுள்ளது.

ஐ.தே.கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை அலறி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படி திட்டத்திட்டனை ரணில் விக்ரமசிங்க விபரித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்தத் திட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருந்தபோதும், மேற்படி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், கலையவுள்ள மாகாண சபைகளின் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அறிய முடிகிறது.

ஆயினும், இது ஜனாதிபதியின் தீர்மானம் எனவும், எனவே அதனை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்ததாகவும் மேற்படி நம்பக வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்