தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி

🕔 September 17, 2017

– ரி. தர்மேந்திரன் –

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் மரணம் விபத்தா அல்லது சதியா என்பதை வெகுவிரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். தலைவர் அஷ்ரப் அமைத்து கொடுத்த தாருஸ்ஸலாம் கட்டடத்தை மோசடி பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் கொடுப்பேன்” என்ற, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும், தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் 17 ஆவது வருட நினைவு தின ஒன்றுகூடல், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகமும், தூய முஸ்லிம் காங்கிரசின் முன்னணி பிரமுகருமான எம்.ரி. ஹசன் அலி, இந் நிகழ்வுக்க தலைமை தாங்கினார்.

இதில் பேராளர்களாக நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.  தாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தொழிலதிபர் நஸார் ஹாஜியார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இங்கு பஷீர் சேகுதாவூத் தொடர்ந்து பேசுகையில்;

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூய தலைவராக, அறப் போராளியாக, அமைச்சராக, முஸ்லிம்களின் விருட்சமாக அஷ்ரப் விளங்கினார் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். இன்றைய அரசியல் சூழலில் இவரைப்பற்றி மீளவும் கலந்துரையாட வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. இவருடைய அரசியலின் சிந்தனைகள், படிமுறைகள், பரிணாம வளர்ச்சிகள் ஆகியன எப்படி அமைந்து காணப்பட்டன என்பதை பார்க்க வேண்டி உள்ளது.

அஷ்ரப்பின் அரசியல் ஆளுமை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ஆளுமையாக உள்ளது. ஆனால் அஷ்ரப் என்கிற அரசியல் ஆளுமை இன்னமும் மரணித்து விடவில்லை என்பதும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ஆளுமைதான் அஸ்தமித்து விட்டது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அவர் பாடசாலை காலத்தில் ஒரு பொதுவுடைமைவாதியாக, ஊடகவியலாளராக விளங்கினார். சிறந்த கவிஞராக, நல்ல சட்டத்தரணியாக, அறப் போராளியாக பரிணமித்தார். அவருடைய அரசியலின் படிமுறைகள், பரிணாம வளர்ச்சிகள் ஆகியவற்றில் அவருடைய இலட்சியம் ஒருபோதும் மாறவே இல்லை. மாறாக அந்த இலட்சியத்தை அடைவதற்கான வியூகங்களையே சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டார்.

ஒரு நல்ல தலைவன் கொள்கையும், வியூகமும் ஒருசேர அமைய பெற்றவராக விளங்குதல் வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய அவருடைய பார்வையில் உறுதியான தெளிவு பதிந்து காணப்பட்டது. ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் செயற்பட்டார். பிரபுத்துவ அரசியலில் அவருக்கு இருந்த வெறுப்பே இதற்கு காரணமாக அமைந்தது. தமிழ் தேசிய விடுதலை ஊடாக முஸ்லிம்களின் விடுதலையை அடைய முடியுமா? என்கிற பரிசோதனையை 1970 களில் தமிழர் விடுதலை கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட்டதன் மூலம் மேற்கொண்டார். அதனால்தான் அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்று கொடுக்கா விட்டால் தம்பி அஷ்ரப் அதை பெற்று கொடுப்பான் என்று முழங்கினார்.

ஆயினும் தமிழ் தேசியவாதம் கால ஓட்டத்தில் வன்முறையாக மாற்றம் பெற்றபோது முஸ்லிம் தேசியம் குறித்து சிந்திக்க தொடங்கினார். முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான அரசியல் வேண்டும், அதன் இயங்குதளமாக கிழக்கு மாகாணம் இருத்தல் வேண்டும், இதன் மூலமாக வடக்கு மாகாண முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மேட்டுக்குடி அரசியலுக்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இவர் ஒப்பந்தம் செய்து கொண்டாராயினும், சில சதி வேலைகள் காரணமாக ஒப்பந்தம் இவரின் ஒப்புதல் இன்றி மாற்றப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான மேட்டுக்குடி வர்க்கத்தை சேராதவரான ஆர். பிரேமதாஸவை ஆதரிக்கின்ற தீர்மானத்தை எடுத்தார்.

அஷ்ரப்  முதலில் எதிர்ப்பு அரசியல் செய்தார். பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சேர்ந்து கூட்டு அரசியல் செய்தார். பொதுவுடைமை புரட்சி இடம்பெற்ற பிரான்ஸ் தேசத்தில் அரசியல் படித்து விட்டு புதிய இரத்தமாக அரசியலுக்கு பிரவேசித்தவரும், இடதுசாரி தலைவர்களில் ஒருவரின் மனைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஆதரித்தார். ஆயினும் 2000 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அவருடைய சிந்தனையில் மிக முக்கியமான மாற்றம் நேர்ந்தது. 12 ஆசனங்களை பெற்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர வேண்டும், அப்போது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் இருக்கும், ஆனால் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து கொண்டே ஒவ்வொரு விடயதானமாக ஆராய்ந்து, அதில் இருக்க கூடிய நன்மைகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வியூகம் அமைத்தார்.

சகல இனங்களையும் உள்வாங்கி செயற்பட வேண்டும் என்று அவர் கண்ட வியூகத்தின் அடிப்படையிலேயே, தேசிய ஐக்கிய முன்னணியை பிற்பாடு உருவாக்கி அதை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்துவதற்கு ஒரு நிதியத்தையும் நிறுவினார். அதற்காக அவரை அர்ப்பணித்தார். இடையில் தாருஸ்ஸலாமை கட்டினார். சிங்கள பௌத்தத்தின் அடையாளமாக அறியப்பட்ட சோம தேரருடன் நேரடி விவாதம் செய்து வெற்றி ஈட்டினார். ஆனால் இச்சூழ்நிலைகளில்தான் இவரின் மரணம் இடம்பெற்றது என்பது அவதானத்துக்கு உரியது. இவருடைய மரணத்தில் மர்மம் உண்டு என்று அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவும் எண்ணியதால்தான் இவரின் மரணத்தை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்தார். இந்த ஜனாதிபதி ஆணைக்குழு மூன்று மாதங்களில் அதன் அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து விட்டபோதிலும் கடந்த 17 வருடங்களாக இவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எனவேதான் தலைவர் அஷ்ரப்பின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று நாம் வலுவாக சந்தேகிக்கின்றோம். தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தலைவர் அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். இது தொடர்பாக எதிர்வரும் மாதம் எனது நேரடி வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள். தலைவர் அஷ்ரப்புக்கு நான் தனிப்பட செய்ய வேண்டிய இரு கடமைகள் உள்ளன. இவரின் மரணம் தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும், தாருஸ்ஸலாமை மோசடி பேர்வழிகளிடம் இருந்து மீட்டு சமுதாயத்துக்கு கொடுக்க வேண்டும் என்பனவே இக்கடமைகள் ஆகும்.

தலைவர் அஷ்ரப்பின் மரணம் விபத்தா? சதியா? என்பதை வெகுவிரைவில் நான் வெளிப்படுத்துவேன். அதே நேரம் தாருஸ்ஸலாமை மோசடி பேர்வழிகளிடம் இருந்து மீட்டு சமுதாயத்துக்கு கொடுப்பேன். இம்மோசடி பேர்வழிகளுக்கு மிக விரைவில் சரியான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும். தாருஸ்ஸலாம் காணி உறுதி மோசடியில் மு.காவின் புதிய செயலாளராக ரவூப் ஹக்கீமால் அவசரமாக நியமிக்கப்பட்டுள்ள நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியும், கட்சியின் பிரதி தலைவர் பதவியும் வழங்கப்பட்ட நஸீர் அஹமட் ஆகியோர் மோசடி குற்றவாளிகள் என்றால், இவர்களுக்கு பதவிகளை வழங்கி வைத்திருக்கின்ற ரவூப் ஹக்கீமுக்கு இம்மோசடியில் என்ன பங்கு? என்று நான் கேட்கின்றேன்.

தலைவர் அஷ்ரப்பின் மரணத்துக்கு பின்னர் முஸ்லிம் அரசியலில் வெறுமை ஏற்பட்டு உள்ளது. அரசியல் வெறுமை உள்ளவரிடம் தலைமை வந்து சேர்ந்து விட்டது. தலைவர் அஷ்ரப் இல்லாத காலத்தில் அவர் விட்டுப் போன பாதையில் தொடர்ந்து நடக்க நாம் தவறி விட்டோம். அண்மையில் தமிழ் தேசியமும், முஸ்லிம் தேசியமும் அரசியலமைப்பன் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு பலியாகி விட்டன.

எனவே நாம் அஷ்ரப்புக்கு செய்ய கூடிய கடமை, கைங்கரியம் ஒன்றே உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சதிகாரர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்று திரண்டு வருகின்ற தேர்தலில் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணிக்கு வாக்களிப்பதன் மூலமாக, தீய முஸ்லிம் காங்கிரஸை விரட்டி அகற்ற வேண்டும், தீய தலைவர் ரவூப் ஹக்கீமை துரத்த வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்